அமெரிக்கா அனுப்பவில்லை.. ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி பற்றி மத்திய அமைச்சர் கூறிய முக்கிய தகவல்
புனே:அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ‛ஏர் இந்தியா' விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் உள்பட 270 பேர் பலியாகி உள்ளனர். விமான விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்துள்ளதால் அதனை அமெரிக்கா அனுப்பி தகவல்களை பெற உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அதனை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு முற்றிலுமாக மறுத்துள்ளார். அதோடு கருப்பு பெட்டி எங்கு உள்ளது? என்பது பற்றி முக்கிய விவரத்தை வழங்கி உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர்கள் மற்றும் சின்ன விமானங்களின் உச்சி மாநாடு 2025ம் ஆண்டு நடந்தது. எப்ஐசிசிஐ ம்றும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் சேர்ந்து இதனை நடத்தியது.
இந்த மாநாட்டில் இன்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பங்கேற்றார். அப்போது மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கேள்விகள் எழுப்பினர்.
அப்போது, ‛ஏர் இந்தியா' விமான விபத்து மற்றும் அதன் கருப்பு பெட்டி குறித்து முக்கிய தகவல்களை கூறினார். பத்திரிகையாளர்கள் சார்பில், விபத்துக்குள்ளான ‛ஏர் இந்தியா' விமானத்தின் கருப்பு பெட்டி அமெரிக்கா அனுப்பி வைக்கப்படுவது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ‛‛இது எல்லாம் யூகத்தின் அடிப்படையில் வெளியான செய்தியாகும். விமானத்தின் கருப்பு பெட்டி இந்தியாவில் தான் உள்ளது. தற்போது கருப்பு பெட்டியை ஏஏஐபி (AAIB or Aircraft Accident Investigation Bureau) விமான விபத்து தொடர்பான புலனாய்வு குழு ஆராய்ந்து வருகிறது'' என்றார். இதன்மூலம் விமானத்தின் கருப்பு பெட்டி அமெரிக்கா செல்கிறது என்ற தகவலை அவர் முற்றிலுமாக மறுத்துவிட்டார்.
மேலும் இந்த வேளையில் அவரிடம், ‛‛கருப்பு பெட்டியில் பதிவான விஷயங்கள் பற்றிய விவரம் எப்போது வெளியாகும்'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.அதற்கு அவர், ‛‛இது தொழில்நுட்பம் சார்ந்தது. ஏஏஐபி விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதன் முழு விசாரணை முடிவடைந்த பிறகு அதுபற்றிய விவரம் தெரியவரும்'' என்றார்.
முன்னதாக கடந்த 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இது போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானமாகும். விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு நிமிடத்தில் விபத்துக்குள்ளானது. அங்கிருந்த மருத்துவக்கல்லூரியின் தங்கும் விடுதி மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. விமானத்தில் இருந்த 241 பயணிகள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த ஒரு பயணி மட்டுமே தப்பினார்.
விமான விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை நல்லபடியாக நடந்து வருவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பைலட்டுகள் பேசுவது பதிவாகும் கருப்பு பெட்டி விபத்து நடந்த மறுநாள் அதாவது 13ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது கருப்புபெட்டியை ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதில் உள்ள தகவல்களை வெளியாகும் பட்சத்தில் விமான விபத்துக்கான கரணம் தெரியவரும். இதனால் விமான விபத்து பற்றி விசாரணை மேற்கொண்டு வரும் ஏஏஐபி கருப்பு பெட்டியை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
இதற்கிடையே தான் கருப்பு பெட்டியை அமெரிக்கா அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதனை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு மறுத்துள்ளார். இந்தியாவில் தான் கருப்பு பெட்டி ஆராயப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications