ஆதிவாசி VS வனவாசி.. பாஜகவின் புதிய வார்த்தை பிரயோகம்! யாத்திரையில் சரமாரியாக தாக்கிய ராகுல்காந்தி!
போபால்: மத்தியப் பிரதேசத்தில் 'பாரத் ஜோடோ யாத்திரையை' மேற்கொண்ட ராகுல்காந்தி, ஆதிவாசி மக்களை 'வனவாசிகள்' என்று அழைப்பதன் மூலம் பாஜக அவர்களின் உரிமைகளை பறிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பழங்குடியினர் இந்நாட்டின் அசல் உரிமையாளர்கள் என்றும், அவர்களுக்கான உரிமைகளை காங்கிரஸால்தான் உறுதி செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.

பழங்குடியினர் VS வனவாசி
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக ராகுல்காந்தி நாடு தழுவிய நடைப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்த பயணம் தற்போது மத்தியப் பிரதேசத்தை எட்டியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் போர்கானில் இருந்து செகான் மக்கானை இந்த யாத்திரை நேற்று அடைந்தது. இந்த பயணத்தில் பழங்குடியினரை சந்தித்த ராகுல்காந்தி அவர்கள் மத்தியில் உரையாடினார். அவர் பேசியதாவது, "பழங்குடியினர் என்பதன் பொருள் என்ன? அவர்கள் இந்த நாட்டின் அசல் உரிமையாளர்கள். ஆனால் இங்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், பெரும் பணக்காரர்களும் உங்களை வனவாசிகள் என்று அழைக்கின்றனர். குறிப்பாக பாஜக இதில் உறுதியாக இருக்கிறது.

உரிமைகள்
இதன் அர்த்தம் என்ன? உங்கள் நிலம் உங்களுடையது அல்ல என்பதுதான். உங்கள் உரிமைகளையும் இதன் மூலம் அவர்கள் பறிக்க பார்க்கின்றனர். ஆனால் காங்கிரஸ் ஒன்றை உறுதியாக நம்புகிறது. அதாவது நீங்கள்தான் இந்நாட்டின் அசல் உரிமையாளர்கள். முழு நாடும் உங்களுடையதுதான். இந்த நாடு உங்களிடமிருந்து பறிக்கப்பட்டது. உங்களுக்கு உரியது உங்களுக்கு திருப்பி கொடுக்கப்பட வேண்டும். உங்கள் உரிமை, கல்வி, நிலம் என அனைத்தும் திரும்ப கொடுக்கப்பட வேண்டும். காங்கிரஸ் இதைதான் விரும்புகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் அதை செய்வோம் என்றும் நம்புகிறோம்" என கூறியுள்ளார்.

வீடியோ
இதனையடுத்து அவர் 1.19 நிமிடம் கொண்ட வீடியோ ஒன்றையும் டிவிட்டரில் வெளியிட்டிருந்தார். அதில், "பாஜக பழங்குடியினரை வனவாசிகள் என்று கூறிக்கொண்டு அவர்களின் உரிமைகளை பறித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் அதை தடுக்க போராடிக்கொண்டிருக்கிறது. நாடு சுதந்திரமடைந்ததற்கு பின்னர் பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாக்க காங்கிரஸ் எல்லாவற்றையும் செய்தது. காங்கிரசின் முன் முயற்சியில் டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் இந்திய நாட்டின் அரசியலமைப்பை எழுதினார். ஆனால் பாஜக அரசியலமைப்பே கூடாது என்று சொல்கிறது. இதுதான் காங்கிரசுக்கும் பாஜகவுக்குமான வேறுபாடு.

யாத்திரை
வனங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காடுகள் மீதான உரிமையை வழங்கியது காங்கிரஸ்தான். வன உரிமைச் சட்டம் மற்றும் PESA ஆகியவை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது. பழங்குடியின மக்களுக்கான உரிமைகளுக்கு காங்கிரஸால் மட்டுமே உறுதியாக போராட முடியும்" என்று கூறியுள்ளார். ஏற்கெனவே கடந்த 2 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ள நிலையில் எதிர்வரும் 2024ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற கட்சி கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாகவே 3,500 கி.மீ 'பாரத் ஜடோ யாத்திரையை' ராகுல்காந்தி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications