ராமநாதபுரத்தில் சோகம்.. ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு வீடு திரும்பிய டாக்டர் திடீர் மரணம்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் பால்பாண்டியன் என்பவரது மகனாகிய டாக்டர் வசந்த கிருஷ்ணன் என்பவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு வீடு திரும்பிய போது மயக்கம் அடைந்து உயிரிழந்தார். வெறும் 32 வயதில் மாரடைப்பால் டாக்டர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய சூழலில் உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும், உடல் எடையை குறைக்கவும் பலரும் ஜிம்மிற்கு செல்கிறார்கள். ஜிம் எனப்படும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வோர் எண்ணிக்கை கடந்த20 வருடங்களில் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. உடல் உழைப்பு குறைந்துவிட்ட வேலைமுறையால், பலரும் உடற்பயிற்சி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உடற்பயிற்சி செய்வது, பலருக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தருகிறது. தினசரி காலையில் எழுந்து ஜிம்மிற்கு சென்று கடுமையான உடற்பயிற்சிகளை செய்வதை பலரும் வாழ்க்கையின் தினசரி கடமைகளில் ஒன்றாக வைத்துள்ளார்கள். ஆனால் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் ஒருசிலர் அவ்வப்போது அதீத களைப்படைந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கிறது. தீவிர உடற்பயிற்சி செய்வோர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழப்பது நடக்கிறது. அப்படித்தான் ராமநாதபுரத்தில் நடந்துள்ளது.
ராமநாதபுரம் நகர் காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டியன் என்பவர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரின் மகன் 32 வயதாகும் வசந்த கிருஷ்ணன், தனியார் மருத்துவமனை ஒன்றில் டாக்டராக பணியாற்றி வந்தார்.இவருக்கும், டாக்டர் சிவலட்சுமி என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.
சிவலட்சுமி ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றிய நிலையில் 3 மாத கர்ப்பிணியாக இருப்பதால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். வசந்த கிருஷ்ணன் ராமநாதபுரம் பெரியார் நகர் பகுதியில் உள்ள வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் வசந்தகிருஷ்ணன் அருகிலுள்ள உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்துவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது லேசான மயக்கம் ஏற்பட்டு விழுந்த அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். மாரடைப்பு காரணமாக வசந்த கிருஷ்ணன் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications