வேக்சின் போடுங்க.. அரை மணிநேரமாக கெஞ்சிய நர்ஸ்கள்.. பாதியில் ஓடிய மக்கள்.. ராமநாதபுரத்தில் பரிதாபம்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதுகுளத்தூர் அருகே கிராமம் ஒன்றில் கொரோனா வேக்சின் போட்டுக்கொள்ள மக்கள் முன்வராத காரணத்தால் செவிலியர்கள் மக்களிடம் கெஞ்சிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு உள் மாவட்டங்களில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. முக்கியமாக தென் மாவட்டங்களில் தினசரி கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இப்படி கொரோனா அதிகரித்து வரும் நிலையில் வேக்சின் மட்டுமே தீர்வாகி உள்ளது.
முக்கியமாக கிராமங்களிலும், உள் மாவட்டங்களிலும் கொரோனா வேக்சினை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு 5 கோடி வேக்சினுக்காக ஏற்கனவே வெளிநாடுகளில் டெண்டர் விட்டுள்ளது.

டெண்டர்
வேக்சின்களை வாங்க தமிழக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் மக்கள் பலர் வேக்சின் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். வேக்சின் எடுத்தால் பலியாகிவிடுவோம், ரத்த கட்டு வரும், வேக்சின் எல்லாம் அரசியல் என்று தவறாக வழிகாட்டப்பட்டு, வேக்சின் எடுக்க விருப்பம் இன்றி அச்சத்தில் உள்ளனர். மக்களின் அச்சத்தை போக்க இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வு பணிகள் நடந்து வருகின்றன.

விருப்பம் இல்லை
இந்த நிலையில் ராமநாதபுரத்தில் முதுகுளத்தூர் அருகே கிராமம் ஒன்றில் கொரோனா வேக்சின் போட்டுக்கொள்ள மக்கள் முன்வராத காரணத்தால் செவிலியர்கள் மக்களிடம் கெஞ்சிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ரமந்தபுரத்தில் உள்ள 490+ கிராமங்களில் 300 கிராமங்களில் கொரோனா கேஸ்கள் இல்லாத நிலையில், அங்கு கிராமம் கிராமமாக வேக்சின் போடும் பணிகளை தமிழக அரசு முடிக்கிவிட்டது.

அதிகாரிகள்
இதற்காக ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முதுகுளத்தூர் அருகே கீழகாஞ்சரங்குளம் கிராம மக்களிடம் தடுப்பூசி செலுத்த அதிகாரிகள் சென்ற போது, மக்கள் யாரும் தடுப்பூசி போட முன் வரவில்லை. வேக்சின் மீது நம்பிக்கை இல்லாமல், அச்சம் காரணமாக இவர்கள் வேக்சின் போட மறுத்துவிட்டனர்.

அதிகாரிகள் கெஞ்சல்
இதையடுத்து அரசு அதிகாரிகள் மக்களிடம் வேக்சின் போடும்படி கெஞ்சியுள்ளனர். வேக்சின் போட்டுக்கொள்வதை தவிர்க்க அங்கிருந்த சிலர் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறி, வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். பாதியில் பலர் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த பெண்களிடம் செவிலியர்கள் பேசி உள்ளனர்.

செவிலியர்கள்
அங்கிருந்த பெண்களிடம் செவிலியர்கள் வேக்சினின் பலன் குறித்தும், நாங்களும் வேக்சின் எடுத்துவிட்டோம் என்றும் பேசி நம்பிக்கை அளித்துள்ளனர். இதையடுத்து வெறும் 8 பேர் மட்டுமே வேக்சின் எடுக்க ஒப்புக்கொண்டுள்ளனர். இவ்வளவு கெஞ்சியும், கிராமத்தில் பலர் இருந்தும், இப்படி 8 பேர் மட்டுமே வேக்சின் போட முன் வந்ததால் அங்கிருந்து அதிகாரிகள், செவிலியர்கள் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர்.












Click it and Unblock the Notifications