பதவி பஞ்சாயத்து.. உரிமை இழந்த அதிமுக! ஜெயலலிதா வழங்கிய தேவர் தங்க கவசத்தை அணிவித்த பொறுப்பாளர்கள்
ராமநாதபுரம்: முத்துராமலிங்க தேவருக்கு ஜெயலலிதா அளித்த தங்க கவசத்தை அணிவிக்க உரிமைகோரி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே நடந்த மோதலில் அந்த உரிமை நினைவிட பொறுப்பாளர்களுக்கு சென்று நேற்று அவர்கள் கவசத்தை அணிவித்துள்ளார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 115 வது ஜெயந்தி மற்றும் 60 வது குருபூஜை விழா வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இதர அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.

பாதுகாபு ஏற்பாடு
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை முடுக்கிவிட்டு உள்ளது. நேற்று பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கமுதி தனி ஆயுதப்படை கூட்ட அரங்கில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஐஜி அஸ்ரா கார்க்
"தேவர் குருபூஜை விழாவில் 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். போலீஸார் அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தடை விதிக்கப்பட்ட இடங்கள், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்கள் மூலம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ட்ரோன், சிசிடிவி
காவல் துறை பிறப்பித்த உத்தரவுகளை மீறி நடந்து கொள்பவர்களையும் வாகனங்களையும் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் மூலம் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பசும்பொன்னில் 13 ட்ரோன் கேமராக்கள், 92 நிரந்தரக் கேமராக்கள் கண்காணிப்பு பணிக்காக பயன்படுத்தப்பட இருக்கிறது." என்றார்.

தங்க கவசம்
கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, தேவர் சிலைக்கு தங்க கவசம் ஒன்றை அணிவித்து இருந்தார். பாதுகாப்பு கருதி அந்த தங்க கவசம் மதுரையில் உள்ள வங்கியில் அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள் இருவரும் கையெழுத்திட்டு பாதுகாப்புடன் பயன்படுத்தப்பட்டு வந்தது.

மதுரை உயர்நீதிமன்றம்
இந்த நிலையில் அதிமுக தற்போது இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பிலும் ஓபிஎஸ் சார்பிலும் தங்களிடம் தங்க கவசத்தை கொடுக்குமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்து மீண்டும் வங்கியில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தி இருந்தது.

தங்க கவசம் அணிவிப்பு
இதையத்து நேற்று வங்கியில் மதுரை வருவாய்த்துறை அதிகாரி சக்திவேல் மற்றும் நினைவாலயம் சார்பில் தங்க கவசம் பெற்று பசும்பொன்னில் ராமநாதபுரம் பொறுப்பு வருவாய்த்துறை அதிகாரி ராஜசேகரன் மற்றும் தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள் அதை வாங்கினர். இதனை தொடர்ந்து தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. இதனையடுத்து நினைவிடத்தில் பூஜைகள் செய்யப்பட்டு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.












Click it and Unblock the Notifications