கொரோனா கொடுமைகள்... வீட்டை தட்டி வைத்து அடைக்கும் நகராட்சி ஊழியர்கள்.. கொதிக்கும் கீழக்கரைவாசிகள்..!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இல்லங்களை தட்டி வைத்து அடைப்பதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் கொரோனாவின் 2-வது அலை தமிழகத்தில் படிபடியாக குறைந்து வருகிறது. இதற்கு காரணம் ஆரம்பக்கட்ட கொரோனா சோதனையும் அதற்கு அளிக்கப்படும் சிகிச்சையும் தான். கடந்த காலங்களில் கொரோனா சோதனை என்றாலே மக்கள் ஓட்டம் பிடித்த நிலையில் இன்று பலரும் ஆர்வமுடன் கொரோனா சோதனை செய்து கொள்வதுடன் தடுப்பூசிகளையும் தாங்களாகவே முன் வந்து போட்டுக் கொள்கின்றனர். இதற்கு காரணம் மக்கள் மத்தியில் காணப்பட்ட பீதியை அறிவியல் பூர்வமாக செயல்பட்டு தமிழக அரசு தன்னம்பிக்கை அளித்து வருகிறது.

மேலும், சமூக இடைவெளி, தூய்மை பேணுதல், மூலம் கொரோனாவை ஒழிக்கலாம் என்றும் மக்கள் தேவையற்ற பீதி கொள்ளத்தேவையில்லை எனவும் மத்திய அரசு தன் பங்குக்கு மக்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் கொரோனா பெயரில் மக்களை பீதி அடைய வைக்கும் வகையிலான நடவடிக்கைகள் ஆங்காங்கு தொடரத்தான் செய்கின்றன. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இல்லங்களை தட்டி வைத்து முற்றிலும் அடைப்பதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் உள்ள போதும் அவர்களது வீடுகள் முற்றிலும் அடைக்கப்படுகின்றன.

இது தொடர்பாக பேசிய கீழக்கரை வடக்குத் தெருவை சேர்ந்த அப்துல் சலாம் என்பவர், எனது உறவினர் ஒருவர் லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது வீடு முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்களை கூட பெற முடியாமல் அந்தக் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். மேலும், அந்த வீட்டில் உள்ள கைக்குழந்தைகளுக்கு தேவையான மருந்துகளை கூட வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது எனத் தெரிவிக்கிறார்.


Click it and Unblock the Notifications
