ராமநாதபுரத்தில் ட்விஸ்ட்! "எனக்கும் வயசாகிடுச்சி! நான்தான் ஐயா OPS"! சுயேச்சை அலப்பறை! ஓபிஎஸ் கதி?
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் OPS க்கு வாக்களிக்குமாறு சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தனது பெயரை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் போல் சுருக்கி நோட்டீஸ் விநியோகம் செய்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அது போல் அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.

அது போல் பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, ஓபிஎஸ்ஸின் அதிமுக உரிமை மீட்பு கழகம், தமாகா, புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. எனவே இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இணைந்த ஓபிஎஸ், ஆரம்பத்தில் 2 தொகுதிகளை கேட்டதாகவும் அதற்கு பாஜக தலைமை மறுத்ததாகவும் தெரிகிறது. அதாவது சின்னமே இல்லாமல் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் ஓபிஎஸ்ஸுக்கு எப்படி இரு தொகுதிகளை ஒதுக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது.
அத்துடன் 2 தொகுதிகள் வேண்டும் என்றால் இரு தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும். இல்லாவிட்டால் ஒரு தொகுதியில் சுயேச்சையாகவும் ஒரு தொகுதியில் தாமரை சின்னத்திலும் நிற்கலாம். இதுவும் வேண்டாம் என்றால் ஒரே ஒரு தொகுதிதான் தர முடியும் என கூறிவிட்டனர்.
இதனால் வேறு வழியில்லாமல் அவர் சுயேச்சையாக ராமநாதபுரத்தில் களமிறங்கினார். தென் மண்டலத்தில் எப்படியும் நம் பெயர் மக்களுக்கு அத்துபடி என்பதாலும் அவர் சமூகத்து மக்கள் அங்கு நிறைய பேர் வசிக்கிறார்கள் என்பதாலும் வெற்றி நமக்குத்தான் என்ற குஷியுடன் அங்கு களமிறங்கினார்.
ஆனால் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளுக்கு முந்தைய நாள் ஓபிஎஸ் இல்லாமல் 4 ஒபிஎஸ்கள் சுயேச்சைகளாக களமிறங்கினர். இவர்களில் சிலர் ராமநாதபுரம், மதுரை, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர். இதனால் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளில் இன்னும் எத்தனை பேர் களமிறங்க போகிறார்களோ என்ற எண்ணத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இருந்த நிலையில் அன்றைய தினம் மேலும் ஒருவர் எம்.பன்னீர் செல்வம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஆக மொத்தம் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுடன் மேலும் 4 ஒபிஎஸ்களும் ஒரு எம்பிஎஸ்ஸும் களத்தில் உள்ளனர். இது எல்லாம் எடப்பாடி பழனிசாமி அணியினரின் வேலை என ஓபிஎஸ்ஸும் ஓ.பி.ரவீந்திரநாத்தும் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் ஓபிஎஸ் கேட்ட வாளி சின்னம் வேறு ஒருவருக்கு போய்விட்டது.
இதனால் ஓபிஎஸ்ஸுக்கு பலாப்பழச் சின்னம் கிடைத்தது. வாளி சின்னம் குலுக்கல் முறையில் மதுரை வாகைக்குளத்தைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஒச்சாத்தேவர் மகனான பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ராமநாதபுரம் தெற்கு காட்டூரை சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வத்துக்கு கண்ணாடி டம்ளர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் கங்கைகொண்டானை சேர்ந்த மலையாண்டி மகன் பன்னீர்செல்வத்துக்கு பட்டாணி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை சோலை அழகுபுரத்தை சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வத்துக்கு திராட்சை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வத்துக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரே இனிஷியல் பெயரை கொண்டவர்களை காசு கொடுத்து அழைத்து வந்து வேட்புமனு தாக்கல் செய்ய வைத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது ஓபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியது. இந்த நிலையில் திராட்சை சின்னத்தை கொண்டுள்ள அழகுபுரத்தை சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர் செல்வம், உங்கள் வாக்கு ஐயா OPS க்கு திராட்சை சின்னத்தில் அளியுங்கள் என நோட்டீஸ் அடித்து வீதி வீதியாக கொடுத்து வருகிறார்.
இவரை செய்தியாளர்கள் சிலர் சுற்றி வளைத்து அவரிடம் நீங்கள் வெற்றி பெற்றால் தொகுதிக்கு என்ன செய்வீர்கள் என கேட்டனர். அதற்கு அவர் படக்கென கச்சத்தீவை மீட்டுக் கொடுப்பேன் என்றார். பிறகு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு என கேட்டதற்கு, நான் போற இடத்துலலாம் நல்லாதான் இருக்கு! எனக்கு நான்தான் போட்டி ! என்றார்.
ஓபிஎஸ் என சுருக்கி எழுதுவது முன்னாள் முதல்வர்தானே பயன்படுத்தி வந்தார், அதே போல் நீங்களும் பயன்படுத்துகிறீர்களே என கேட்டதற்கு, என்னை பார்த்துத்தான் அவர் காப்பி அடித்தார் என சொல்லிவிட்டார். எனக்கு வயதாவதால் நானே ஐயா என எனக்கு அடைமொழி வைத்துக் கொண்டேன். என்னை யாரும் வற்புறுத்தி போட்டியிட வைக்கவில்லை. நானேதான் போட்டியிடுகிறேன். இந்த நிலையில் ஓபிஎஸ்ஸுக்கு வாக்குகள் விழாதபடி தடுக்க "ஐயா OPS" என அச்சடித்து வாக்கு சேகரிப்பது குறித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications