சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய மன்னராகவே திகழ்கிறார் பிரதமர் மோடி! நயினார் நாகேந்திரன் புகழாரம்
ராமேஸ்வரம்: காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் சிறப்பு நூல்களை வெளியிட்டார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ் வளர்த்த பாண்டியன் மன்னரைப் போலப் பிரதமர் மோடி இருப்பதாகத் தெரிவித்தார்.
காசிக்கும் தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்கும் இடையே உள்ள கலாச்சாரப் பண்பாடு ஆன்மீக வரலாற்றுத் தொடர்புகளைப் புனரமைக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தாண்டு காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி டிசம்பர் 2 முதல் 15 வரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

இந்த காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகத் துணை குடியரசுத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அவர் விழா நினைவு நூல்களை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்புரை ஆற்றிய நிலையில், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், ஆளுநர் ஆர்.என் ரவி உள்ளிட்டோரும் உரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காகப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். பாண்டிய மன்னர்கள் எப்படி மதுரையில் சங்கம் அமைத்து தமிழை வளர்த்தனரோ.. அதேபோல பிரதமர் நரேந்திர மோடியும் பாண்டிய மன்னனைப் போல் தமிழ் வளர்த்து வருவதாகத் தெரிவித்தார்.
தமிழ்மொழி நாடு முழுக்க கற்க வேண்டும் என்பதற்காக காசி தமிழ்ச்சங்கம் 4.0 தொடங்கப்பட்டது என்று சொன்ன அவர், தமிழ் தாயைப் போற்றும் விதமாக இந்த காசி தமிழ் சங்கமத்தைப் பிரதமர் மோடி நடத்தியிருப்பதாகத் தெரிவித்தார். மேலும், உத்திரப் பிரதேச மாநிலத்தில் தமிழை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இந்திய நாட்டில் வாழும் மூவேந்தர் மன்னராகப் பிரதமர் மோடி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல இந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் ரவி, அனைவருக்கும் வணக்கம் எனக் கூறி தனது உரையைத் தொடங்கினார். வெளிமாநிலங்களிலும் 1000+ மாணவர்கள் தமிழ் கற்பதாகத் தெரிவித்த அவர், தமிழ்மொழி பழமையும் சக்தியும் வாய்ந்த மொழி என்றும் தமிழ் அருமையான மொழி என்றும் தெரிவித்தார். மேலும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் பெருமைக்கும் பாரதப் பிரதமர் மோடி செய்ததை போல வேறு யாரும் செய்திருக்க முடியாது என்றும் இதற்காகப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஆளுநர் ரவி தமிழில் உரையாற்றி இருந்தார். பின்னர் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் உரையாற்றும்போது ஆளுநர் ரவியின் தமிழ் உரையைக் குறிப்பிட்டுப் பேசினார். ஆளுநர் ரவி தமிழில் பேசுவதைப் பார்க்கும்போது தனக்கு இந்தியில் பேச வேண்டும் என ஆசை வருவதாகக் குறிப்பிட்டார். ஆளுநர் ரவி அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவுக்குச் சரளமாக இந்தி பேச ஆசைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications