ஏவுகணை நாயகன் டாக்டர் அப்துல் கலாம் 90வது பிறந்தநாள் - ராமேஸ்வரம் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை
அக்னி நாயகன் என்று அடைக்கப்படும் பெருமைக்குரிய மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 90வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
ராமேஸ்வரம்: ஏவுகணை நாயகன் மக்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாமின் 90 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடம் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பொருப்பு காமாட்சி கணேசன் மற்றும் அரசு அதிகாரிகள் அப்துல்கலாம் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை நாயகன் பாரத ரத்னா அப்துல் கலாமின் 90வது பிறந்தநாளையொட்டி இன்று பேக்கரும்புவில் அமைந்துள்ள தேசிய நினைவகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நினைவகத்தில் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரத்தில் 1931 அக்டோபர்15ஆம் தேதி பிறந்த அப்துல் கலாம், விஞ்ஞானியாக உயர்ந்தார். ஏழ்மை குடும்பத்தில் இருந்து வந்தாலும், தன் அயராத உழைப்பினால், பலவற்றை சாதித்து, உலக அளவில் மிகவும் பிரபலமான மனிதரானதோடு, மிகச்சிறந்த பேராசிரியராகவும் விளங்கினார். அக்னி நாயகனான அவரின் திறமையை பாராட்டி நாட்டின் உயர் விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.
இந்தியாவின் 11வது குடியரசுத்தலைவராக பொறுப்பேற்ற கலாம் தனது எளிமையால் மக்கள் ஜனாதிபதி என்றழைக்கப்பட்டார். மாணவர்கள், இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் ஆண்டு அவர் மறைந்தார். அவரது உடலானது அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அப்துல்கலாம் நினைவிடத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு, ஆராய்ச்சி மேம்பாட்டு துறையின் சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு 2017 ஜூலை 27ம் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
இன்று அப்துல்கலாம் 90 வது பிறந்தநாளையொட்டி ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடம் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அப்துல்கலாமின் பேரன் சலீம்,சேக்,ராமேஸ்வரம் ஜமாத் தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் கலாம் நினைவிடத்திற்கு வந்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பொருப்பு காமாட்சி கணேசன் மற்றும் அரசு அதிகாரிகள் அப்துல்கலாம் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் காலம் தேசிய நினைவ வளகாத்தில் 100 மரகன்றுகள் நடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மரம் நட்டு துவக்கி வைத்தார்.
அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவகத்தில் அஞ்சலி செலுத்த வரும் பொது மக்களை கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மத்திய அரசின் பாதுகாப்பு, ஆராய்ச்சி மேம்பாட்டு துறையினர் நினைவகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.
அப்துல் கலாம் பொன் மொழிகள் :
அப்துல்கலாம் மாணவர்களுக்கு கூறிய அறிவுரைகள் அனைத்துமே மாணவர்களை சிந்திக்கச் செய்ததோடு, அதற்கேற்ப நடக்கவும் வைத்தது. மேலும் இவர் தன்னம்பிக்கையூட்டும் பல பொன்மொழிகளை எழுதியுள்ளார். அவரது பிறந்தநாளில் சில பொன்மொழிகளை பெருமையுடன் நினைவு கூறுவோம்.
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!
கனவு காணுங்கள்! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல.. உன்னை தூங்க விடாமல் செய்வதே (இலட்சிய) கனவு
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல... உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே...
அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஆனால், ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்
கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.












Click it and Unblock the Notifications