ராமேஸ்வரத்தில் என்.ஐ.ஏ திடீர் சோதனை.. 4 மணி நேரத்திற்கும் மேலாக சல்லடை போட்டு தேடிய அதிகாரிகள்!
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் ஒருவரின் வீட்டில் இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடை செய்யப்பட்ட இயக்கங்கள், அதனுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள், சட்டவிரோதமான செயல்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) தீவிரமாக கண்காணித்து வருகிறது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்னர் தடை செய்யப்பட்ட இயக்கம் தொடர்பாக பலரது வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகேயுள்ள மீனவ கிராமமான தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்தவர் சையது யூசுப் (30). இவரது தந்தை அதே பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இதற்கிடையே சையது யூசுப் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் நாட்டிற்கு வேலைக்காகச் சென்றார். அங்கு 6 மாதங்கள் வரை தங்கியிருந்த அவர் மீண்டும் சொந்த ஊர் திரும்பினார்.
துபாயில் சையது யூசுப் தங்கியிருந்த நாட்களில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் அவர் தொடர்பு வைத்திருந்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சொந்த ஊர் திரும்பிய சையது யூசுப்பை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
சையது யூசுப்பின் செயல்பாடுகள், அவர் யார் யாருடன் பேசி வருகிறார், யாரையெல்லாம் சந்திக்கிறார் என்பது போன்ற தகவல்களை சேகரித்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை ஐந்தே முக்கால் மணியளவில் தங்கச்சிமடம் கிராமத்துக்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் சென்ற 7 என்.ஐ.ஏ அதிகாரிகள் சையது யூசுப் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் இருந்த சையது யூசுப் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரையும் வெளியில் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. மேலும் சையது யூசுப்பின் செல்போன்கள், வீட்டில் இருந்த கம்ப்யூட்டர், ஆவணங்கள் போன்றவற்றையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சுமார் 4 மணி நேர சோதனைக்கு பிறகு அங்கிருந்து புறப்பட்ட அதிகாரிகள் அங்கிருந்து எந்த ஆவணங்களையும் எடுத்துச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. அதேசமயம் சையது யூசுப்பிடம், அவர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்றும், மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணைக்கு அழைக்கும்போது தவறாமல் ஆஜராக வேண்டும் என்றும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கச்சிமடம் மீனவ கிராமத்தில் இன்று அதிகாலையிலேயே அதிரடியாக என்.ஐ.ஏ அதிகாரிகள் வந்து வீடு முழுக்க சல்லடை போட்டு சோதனை நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று புதுச்சேரியில் நடந்த கொலை தொடர்பாக கடலூரில் உள்ள ஒரு வீட்டில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications