திமுக அரசின் அலட்சியத்தால் தான் பாலமுருகன் உயிர் பறிபோனது.. இனி இப்படி நடக்கக்கூடாது: ஓபிஎஸ் கண்டனம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தாழ்வாகச் சென்ற உயரழுத்த மின்கம்பி டிராக்டர் பட்டு மின்சாரம் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார். மின்வாரிய ஊழியர்களின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நடந்ததாக இறந்தவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குமாறு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் பாலமுருகன் நேற்று காலை காந்தி நகர் பகுதியில் விவசாயப் பணியை மேற்கொண்டிருந்தபோது, அங்கு தாழ்வாக இருந்த உயர் அழுத்த மின்கம்பி அவர் ஓட்டிச் சென்ற டிராக்டரில் உராய்ந்ததன் காரணமாக, மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

பாலமுருகனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். முதுகுளத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் மின் கம்பி தாழ்வாக செல்கிறது என்றும், இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்படும் என்றும், இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் பலமுறை மின்சார வாரிய அலுவலகத்தில் முறையிட்டும், அரசு எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தி.மு.க அரசின் அலட்சியப் போக்கு காரணமாக பாலமுருகன் என்ற இளைஞரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. தி.மு.க அரசின் மெத்தனப் போக்கிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த பாலமுருகனுக்கு திருமணம் முடிந்து ஒன்றரை ஆண்டு ஆகியுள்ள நிலையில் அவருடைய உயிர் பறிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் கோரிக்கையினை ஏற்று தாழ்வாக சென்ற மின் கம்பியை சரி செய்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது. இந்த உயிரிழப்புக்கு காரணம் தி.மு.க அரசின் நிர்வாகத் திறமையின்மைதான் என்று சொன்னால் அது மிகையாகாது. தி.மு.க. அரசின் அக்கறையின்மை காரணமாக பாலமுருகன் உயிரிழந்துள்ளார் என்பதையும், உயிரிழந்த பாலமுருகன் அவர்களின் குடும்பச் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்திற்கு 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்றும் அதிமுக சார்பில் முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.
இனி வருங்காலங்களில், இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம், பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்." என்றும் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications