பாம்பன் புதிய ரயில் பாலம்.. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கையால் பயணிகள் அதிர்ச்சி.. என்ன நடக்குது?
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பாம்பன் கடலில் புதிதாக ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில்
ரயிலை இயக்கியும் சோதனை நடந்தது. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட பாம்பன் ரயில்வே பாலத்தில் அரிப்பு, துருப்பிடித்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் இல்லை. தற்போதே அரிப்பு ஏற்பட்டுள்ளது என்று ரயில்வே ஆணையர் அறிவிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் பாம்பன் ரயில் பாலத்தில் பிரச்சினைகளை சீர் செய்த பிறகு ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
ராமநாதபுரம் பாம்பன் கடலில் ரூ 550 கோடியில் 21 கி.மீ. தூரத்திற்கு புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மையத்தில் 77 மீட்டர் நீளத்தில் 650 டன் எடை கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்த தூக்குப்பாலம் நிறுவப்பட்டது.

இந்த பாலத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து முடிந்த நிலையில், கடந்த 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார். பாலத்தின் தரம் உள்ளிட்டவற்றை நடந்து சென்றும் தண்டவாளத்தில் செல்லும் சிறிய வாகனத்தில் சென்றும் ஆய்வு மேற்கொண்டார். அதேபோல், பாம்பன் ரயில்வே மேம்பாலத்தில் ரயிலை இயக்கியும் சோதனை நடைபெற்றது.
ஆய்வை முடித்த பிறகு ரயில்வே ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ரயில்வே வாரியத்திற்கு அறிக்கை தாக்கல் செய்தார். இந்த் அறிக்கையில், பாம்பன் ரயில் பாலத்தில் சில விதிகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறியிருந்தார். அதாவது, புதிதாக பாலத்தை திட்டமிடும் முன்பாக ரயில்வே வாரியத்தின் டெக்னிக்கல் ஆலோசனைக்குழுவை அமைக்க வேண்டும். ஆனால், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இந்த விதி எதுவும் பின்பற்றப்படவில்லை.
பாலத்தில் அரிப்பு, துருப்பிடித்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் இல்லை. தற்போதே அரிப்பு ஏற்பட்டுள்ளது. தண்டவாளத்தில் அதிக ஒலி, புதிய பாலத்தில் உள்ள குறைகளை மறு ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும். பாம்பன் புதிய பாலத்தில் 50 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கலாம். அதே வேளையில், பாம்பன் கடல் பகுதியில் 58 கி.மீ. வேகத்தில் காற்று வீசினால் ரயிலை இயக்கக் கூடாது என அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
பாம்பன் ரயில்வே புதிய பாலத்தில் கட்டுமான பணிகள் முடிந்து ரயில்கள் இயக்க தயாரான மேம்பாலத்தில் பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி ரயில்வே ஆணையர் அறிக்கை அளித்துள்ளது பயணிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால் பாம்பன் ரயில் பாலத்தில் பிரச்சினைகளை சீர் செய்த பிறகு ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.












Click it and Unblock the Notifications