"சோதனை மேல் சோதனை.." எந்த பக்கம் போனாலும் சிக்கல் தான்- ஓபிஎஸ் மீது பாய்ந்த புது வழக்கு! என்ன காரணம்
ராமநாதபுரம்: ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ஓபிஎஸ் பணம் கொடுத்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இது தொடர்பாக அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் தரப்பு தனியாகச் செயல்பட்டு வரும் நிலையில், அவர்கள் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் இவருக்கு ஒரு தொகுதியை பாஜக ஒதுக்கியது.

ஓபிஎஸ்: அதன்படி ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக ஓபிஎஸ் போட்டியிடுகிறார். அதிமுகவை மீட்கவும் தனது தொண்டர்கள் பலத்தை நிரூபிக்கவும் தான் இந்த ஒரு தொகுதியில் மட்டும் ஓபிஎஸ் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். நேற்று தான் அவருக்குச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. அவர் வாளி சின்னம் கேட்ட நிலையில், அது அவரது பெயரிலேயே போட்டியிடும் மற்றொரு ஓபிஎஸுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸுக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டது.
இதற்கிடையே நேற்று ராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கி பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் ஓபிஎஸ் கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்த பெண்கள் சிலர் ஓபிஎஸ்ஸுக்கு ஆரத்தி எடுத்தனர். அப்போது ஓபிஎஸ் தனது பாக்கெட்டில் இருந்து 500 ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றை எடுத்து, அதில் சில நோட்டுகளை அருகே இருந்த பெண்ணிடம் கொடுத்தார். சண்டை போட்டுக் கொள்ளாமல் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றும் ஓபிஎஸ் கூறி சென்றார்.
ஆரத்திக்குப் பணம்: இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாக ஆரத்தி எடுக்கும் போது தட்டில் பணத்தை வைப்பார்கள். ஆனால், தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு இப்படிச் செய்யக்கூடாது. செய்தால் அது விதிமீறலாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதற்கிடையே ஆரத்தி எடுத்த பெண்களுக்குப் பணம் கொடுத்தது தேர்தல் நடத்தை விதி மீறல் என்று அதிமுக தரப்பு இப்போது ஓபிஎஸை டார்கெட் செய்ய ஆரம்பித்துள்ளது.
தேர்தல் நேரத்தில் பணம், பரிசுப் பொருட்கள் கொடுக்கக் கூடாது என்று விதி இருக்கும் நிலையில், நடத்தை விதிகளை மீறியதற்காக ஒரு வேட்பாளரைத் தகுதி நீக்கம் கூட செய்ய முடியும். ஓபிஎஸ் பணம் தரும் வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக உள்ளிட்ட கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ராமநாதபுரம் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.
சோதனை மேல் சோதனை: இந்தச் சூழலில் தான் ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது மொத்தம் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரத்திக்கு பணம் கொடுத்தது, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே கூட்டம் நடத்தியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிகபட்ச வாக்குகளைப் பெற்று எப்படியாவது தனது தொண்டர் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவே ஓபிஎஸ் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார். ஆனால், அவருக்குச் சோதனை மேல் சோதனை தொடர்ந்து வருகிறது. இந்த ராமநாதபுரம் தொகுதியில் மட்டும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உடன் சேர்த்து 6 ஓபிஎஸ்கள் களத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே பல ஓபிஎஸ்கள் களத்தில் இருந்து முன்னாள் முதல்வருக்குத் தலைவலியைத் தந்த நிலையில் இப்போது அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications