டிக்டாக் வீடியோவால் மனதை பறிகொடுத்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்.. சிறைக்கு போக வைத்த காதல்
ராமநாதபுரம்: தலைமறைவான ஸ்ரீவில்லிபுத்தூர் இளைஞருடன் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்திய ஷீலா சிக்கியது எப்படி என்பது பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த 60 வயதாகும் முதியவர் ராமர் . இவருடைய மனைவி அன்னலட்சுமி. இவர்களுக்கு நித்யா, ஸ்வேதா என்ற இரு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இதே ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (65), இவருடைய மகன்கள் ராஜேந்திரன் (40), ராம்குமார் (35).

ராமர் குடும்பத்திற்கும், ராமசாமி குடும்பத்திற்கும் பணம் விவகாரத்தில் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 21ம் தேதி நடந்தது.
இரவு 11.45 மணிக்கு முத்துமாரியம்மன் கோயிலில் ராமர் சாமி கும்பிடச் சென்றுள்ளனர். அப்போது கோவிலில் சிம்ம வாகனம் தனிப்பட்ட முறையில் வைக்க வேண்டும் என ராமசாமி தரப்பினர் கேட்டிருக்கின்றார். இதற்கு ராமரும், ஊரில் உள்ள சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ராமசாமி குடும்பத்தினருக்கு ஆத்திரம் அடைந்தனர்
மேலும் ராமசாமி குடும்பத்தினர், ராமரிடம், 'எங்களிடம் கடன் வாங்கிவிட்டு இன்னும் தராமல் இருக்கும் நீ எல்லாம் எங்களை எதிர்த்து பேசுகிறாயா?' என்று கூறி அவரை கடுமையாக அடித்து தாக்கி உள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த ராமர், மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதுகுறித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் ராமரின் மனைவி அன்னலட்சுமி புகார் செய்தார்.
இந்தப் புகார் மீது போலீசார் வழக்குப்பதிந்து, ராமரை அடித்து கொன்றதாக ராமசாமி, ராஜேந்திரன் ஆகிய 2 பேரை ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய ராம்குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் ராமசாமி, ராஜேந்திரனை ஸ்ரீவில்லிபுத்தூா் நகர் போலீசார் உடனடியாக கைது செய்தனர். தலைமறைவான ராம்குமாரை தேடி வந்தனர். பின்னா் பெங்களூருவில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கண்டுபிடித்தனர். அப்போது அவருடன் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மறுவாழ்வு முகாம் மற்றும் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியஷீலாவும் (42) உடன் இருந்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கொலை வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்திய ஷீலா சிக்கியது எப்படி என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதுபற்றி போலீசார் வெளியிட்ட தகவலின் படி, "விருதுநகரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் ராம்குமார் உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார். ராம்குமார் அடிக்கடி செல்போனில் வித்தியாசமான டிக்-டாக், ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.
இந்த வீடியோக்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியஷீலா தனது செல்போனில் பார்த்து வந்திருக்கிறார். அவரது வீடியோக்கள் சத்தியஷீலாவை வெகுவாக கவர்ந்துள்ளன. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் ஏற்கனவே திருமணம் ஆகாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் அவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது.
இதற்கிடையே 2 வாரத்துக்கு முன்பு நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் திருவிழாவில் இன்ஸ்பெக்டர் சத்தியஷீலாவும் பங்கேற்று இருந்தார். அங்கு நடந்த தகராறிலும் ராம்குமாருடன் அவர் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராமரின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியஷீலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த சத்தியஷீலா போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக காதலனுடன் பெங்களூருவுக்கு தப்பிச்சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அங்கு தங்களை பிடிக்க போலீசார் வந்ததை எப்படியோ அறிந்து கொண்ட இருவரும் கோவாவுக்கு செல்ல ரெடியானார்களாம். ஆனால் இருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தார்களாம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சத்தியஷீலா, ராம்குமார் தற்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இளைஞர் வெளியிட்ட டிக்டாக் வீடியோவை பார்த்து மனதை பறிகொடுத்த பெண் இன்ஸ்பெக்டர் அவருடன் பழகி காதல் வயப்பட்டதும், கொலை வழக்கில் சிக்கியதும் விசாரணை முடிவில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications