தடுக்க வந்தது குத்தமா? கலெக்டர் மீது இறையன்புவுக்கு பறந்த புகார்! ஆனா அமைச்சருடன் மனக்கசப்பு இல்லை!?
ராமநாதபுரம்: நேற்று ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.பி நவாஸ் கனி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது தடுக்க முயன்ற கலெக்டர் விஷ்ணு சந்திரன் தள்ளி விடப்பட்டார். இந்நிலையில், கலெக்டர் விஷ்ணு சந்திரன் மீது தலைமை செயலரிடம் புகார் தெரிவித்துள்ளார் நவாஸ் கனி.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நேற்று தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் வருவதற்கு முன்பாகவே விழா தொடங்கியது.

இதனால் கோபமடைந்த எம்.பி நவாஸ் கனி, இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது அமைச்சர் ராஜகண்ணப்பன் எம்.பிக்கு பதில் கொடுத்துள்ளார். இதனால் எம்.பி நவாஸ் கனி - அமைச்சர் ராஜகண்ணப்பன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் மற்றும் எம்.பி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளிவிட்டனர். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பு போலீசார் அவரை தூக்கினர்.
அதற்குப்பிறகு போலீசார் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினர். இதனையடுத்து விழாவில் கலந்து கொள்ளாமல் ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது செய்தியாளர்களிடம் பேசிய நவாஸ் கனி எம்.பி, "தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்காக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு அளிக்கும் விழா 3 மணிக்கு நடைபெறுகிறது என்றும், அதில் கலந்து கொள்ளுங்கள் என்றும் நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
3 மணிக்கு நிகழ்ச்சி என குறிப்பிடப்பட்டிருந்தது. நான் 2.50க்கே சென்றுவிட்டேன். ஆனால் குறிப்பிட்டிருந்த நேரத்திற்கு முன்பே நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை முன்கூட்டியே தொடங்குவதாக இருந்தால் எனக்கு தகவல் தெரிவித்து இருக்கலாமே என மாவட்ட ஆட்சியரிடம் கேட்டேன்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிதாக வந்த ஆட்சியர் என்பதால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என ஆட்சியருக்கு தெரியவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் குறித்து தலைமைச் செயலரிடம் புகார் அளித்துள்ளேன். எனக்கும் அமைச்சருக்கும் எந்த விதமான மனக்கசப்பும் இல்லை" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே, அமைச்சர் மற்றும் எம்.பி இருவரையும் சமாதானம் செய்ய முயன்றபோது தன்னை தள்ளிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications