கழுத்தில் ருத்ராட்ச மாலை.. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மனை மனமருகி வழிபட்ட மோடி
ராமேஸ்வரம்: அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடிய பிரதமர் மோடி கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமியையும் பர்வதவர்த்தினி அம்மனையும் மனமுருகி வழிபட்டார். மோடி வருகையை முன்னிட்டு ராமநாத சுவாமி கோயில் கடற்கரைப் பகுதிகள், பாம்பன் பாலம் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழக பயணத்தின் இரண்டாம் நாளான இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி சென்ற பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரையும் ரங்கநாயகி தாயாரையும் தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுங்கிலும் கூடியிருந்த பொதுமக்களும், பாஜகவினரும் மலர் தூவி பிரதமரை வரவேற்றனர். கார் கதவை திறந்து நின்று, கையை அசைத்தபடி பாஜகவினர் வாழ்த்துகளை ஏற்றார்.
கடற்கரைக்கு சென்ற பிரதமர் மோடி பைஜாமா, ஜிப்பா அணிந்து கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி மந்திரங்கள் உச்சரித்தார். பின்னர் பேட்டரி கார் மூலம் ராமநாத சுவாமி கோயிலுக்கு சென்ற மோடி, அங்குள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடினார். பிரதமர் மோடிக்கு ராமநாதசுவாமி கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
காவி துண்டு போர்த்தி ராமநாதசுவாமி கோயில் பிரகாரத்தை சுற்றி வந்த பிரதமர் மோடி ராமநாதசுவாமி கருவறையின் முன்பு அமர்ந்து சிறப்பு வழிபாடு நடத்தினார். பர்வதவர்த்தினி அம்மனிடம் மனமுருகி வேண்டிக்கொண்டார் பிரதமர் மோடி. அவருக்கு விபூதி குங்கும பிரசாதம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயிலில் உள்ள திருமண்டபத்தில் அமர்ந்து ராமாயணம் பாராயணத்தை கேட்டு ரசித்தார்.
இன்றைய தினம் ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்தில் தங்கி ஓய்வெடுக்கும் பிரதமர் மோடி நாளைய தினம் கோதண்டராமரை தரிசனம் செய்கிறார். தனுஷ்கோடி சென்று புனித நீராட உள்ளார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ராமநாத சுவாமி கோயில், நான்குரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை, தனுஷ்கோடி மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகள், பாம்பன் பாலம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications