ஒரு வாரம் மனப்பாடம் பண்ணி சனிக்கிழமை ஒப்பிப்பார் விஜய்! நடித்து காட்டி சீமான் கலகல பேச்சு!
ராமநாதபுரம்: 10 நிமிடம் பேச அனுமதி கேட்டுள்ள நிலையில் எழுதிக் கொடுப்பதை சனிக்கிழமை வரைக்கும் மனப்பாடம் பண்ணனும் நடித்து பார்த்துட்டு வந்து பேசணும் என விஜய்யை கடுமையாக விமர்சித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரை போல் நடித்தும் காட்டினார். அப்போது தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். தவெக தலைவர் விஜய் தனது பிரச்சார பயணத்தை நாளை முதல் தொடங்குகிறார். இதற்கு சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
ராமநாதபுரத்தில் நடந்த "எது நமக்கான அரசியல்?" என்ற நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது: கொள்கை தலைவர் என நீங்கள் (விஜய்) அறிவித்துள்ளவர்களின் கொள்கை பற்றி பேச வேண்டாமா? காமராஜர் கொள்கை தலைவர் என்றால் யார் காமராஜர் என்று 10 நிமிடம் பேசுங்கள், வேலு நாச்சியார் யார் என்பதை 10 நிமிடம் பேசுங்கள்.

10 நிமிடம்தான் பேச்சு
நீங்கள் மொத்தமாக பேச அனுமதி கேட்டதே 10 நிமிடம்தான். திருச்சியில் பேசுறதுக்கு 10 நிமிடம்தான் கேட்டு இருக்காங்க. அரசு பேசுறதுக்கு கூட ஒரு 5 நிமிடம் கொடுத்திருக்கிறது. இந்த 10 நிமிடம் வரை பேசுவதற்கு வரும் சனிக்கிழமை வரை மனப்பாடம் செய்ய வேண்டும். நடித்துப் பார்த்து வந்து பேச வேண்டும்.
பிக்பாஸ் மாதிரி
பிக்பாஸ் மாதிரி, ஜனங்கள் எல்லாம் விஜய் வருகிறார் என்கிறார்கள். வேட்டைக்கு தான் வெளியே வருவாராம். நீங்கள் வேடிக்கை காட்ட வருகிறீர்கள். ஒரு அடிப்படை தெரியாதா? நீங்கள் வேடிக்கை காட்ட வரும் சிங்கமாக இருக்கிறீர்கள். கோட்பாடு அளவில்தான் எதிர்க்கிறேன். உறவு அளவில் நீங்களும் நானும் அண்ணன் தம்பி இல்லை என்கிறோமா?, இல்லை சண்டை போடுகிறோமா?
விஜய் பேச்சை கேட்டிருக்கீங்களா
எவனாவது விஜய் பேசுறதை உட்கார்ந்து கேட்டிருக்கிறீர்களா? தியேட்டரில் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவில் (FDFS) ரசிகர்கள் கத்துற மாதிரிதான்! உங்களுக்கு நண்பா, நண்பி, எனக்கு தம்பி தங்கை! அவர்களின் எதிர்காலத்திற்குத்தான் நான் போராடி கொண்டிருக்கிறேன். பாஜக உங்கள் கொள்கை எதிரி என்கிறீர்கள். முதலில் உங்கள் கொள்கையை சொல்லுங்கள், அப்புறம் நான் எதிரியா இல்லையானு பார்க்கிறேன்.
முரண்படுவது எதில்
எந்த அரசியலில் முரண்படுகிறீர்கள்? பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் என்ன கொள்கை வேறுபாடு என்று சொல்லுங்கள். பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் கொடியில் வண்ணம் மாறும், எண்ணம் மாறாது, கொள்கை மாறாது. திமுகவுக்கு மாற்று எப்படி திமுகவாக இருக்க முடியும்?
நெருப்பை நெருப்பால் அணைக்க முடியுமா
நெருப்பை அணைக்க நெருப்பால் எப்படி முடியும்? அதற்கு ஒரு தண்ணீர் தேவைப்படுகிறது. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் தரமான இலவச கல்வி வழங்கப்படும். உலக தரத்தில் கல்வி, மருத்துவம் கொடுப்பேன். இது என் கனவு. படித்தவர், படிக்காதவர் எல்லோருக்கும் அரசு வேலை கொடுப்பேன். படிக்காதவர் இல்லை என்ற நிலையை உருவாக்குவேன் என சீமான் பேசினார்.
ஒருமையில் பேசிய சீமான்
இந்த நிகழ்வில் சீமான், விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும் அவரை போல் நடித்தும் பேசியும் காட்டினார். விஜய்யை ஒருமையிலேயே பேசினார். மேலும் சீமான் பேசுகையில், "திராவிடம் என்ற ஒன்று கிடையாது. சங்கி என்றால் கூட நண்பன் என்ற பொருள் வருகிறது. திராவிடம் என்ற சொல் தமிழ்ச் சொல்லே அல்ல. அது சமஸ்கிருதம். மாடல் என்பதும் தமிழ் அல்ல, அது ஆங்கிலம்.
சிங்கம் வேட்டை
ஆண் சிங்கம் வேட்டைக்கு போகாது. பெண் சிங்கம்தான் வேட்டையாடிக் கொண்டு வந்து போடும். அது செத்ததைத்தான் முன்னாடி கொண்டு வந்து போடும். அதைத்தான் ஆண் சிங்கம் உண்ணும், எனவே விஜய் வேட்டையாட வந்த சிங்கம் இல்லை, வேடிக்கை காட்ட வந்த சிங்கம் என்றும் சீமான் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications