அரசியலில் விஜய் ஜொலிப்பது கஷ்டம்.. அண்ணாமலை டாப்பில் வருவாராம்! புது கணக்கை சொன்ன ரஜினியின் அண்ணன்
ராமநாதபுரம்: அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக முக்கிய போட்டியாக இருக்கும் என்றே பலரும் கூறி வருகிறார்கள். இதற்கிடையே தமிழ்நாடு அரசியல் குறித்து ரஜினிகாந்த் சகோதரர் சத்தியநாராயண ராவ் சில கருத்துகளை கூறியிருக்கிறார். தமிழக அரசியலில் விஜய் ஜொலிப்பது கடினம் என்று சொன்ன அவர், அண்ணாமலைக்கு ஆதரவாகவும் சில கருத்துகளை கூறினார்.
தமிழ்நாடு அரசியலில் இப்போது விஜய் குதித்து இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அவர் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் நடக்கும் பல முக்கிய விஷயங்களுக்கு தனது நிலைப்பாட்டை சொல்லும் அவர், கட்சி நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கேற்கிறார். திருப்புவனம் அஜித் குமார் மரணத்தை கண்டித்து தனது முதல் அரசியல் போராட்டத்தையும் அவர் நடத்தியிருக்கிறார்.

ரஜினியின் சகோதரர்
அடுத்தாண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக களமிறங்கவும் இருக்கிறது. அவர் அடுத்தாண்டு தேர்தலில் முக்கிய சக்தியாக இருப்பார் என்றும் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே விஜய் அரசியல் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முதுகுளத்தூரில் அமைந்துள்ள கரும்பிள்ளை மடம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதில் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ் கலந்து கொண்டார். கும்பாபிஷேக விழாவின் பரிகார ஹோமத்தில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சத்தியநாராயண ராவ் கலந்து கொண்டார்.
விஜய்யின் அரசியல் கேள்விக்குறி
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சத்தியநாராயண ராவ், தமிழ்நாடு அரசியல் குறித்து சில கருத்துகளை கூறியுள்ளார். தமிழ்நாடு அரசியலில் நடிகர் விஜய்யின் எதிர்காலம் கேள்விக்குறி என்று குறிப்பிட்ட அவர், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புத்திசாலி என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "தமிழ்நாடு அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம். அதேநேரம் அண்ணாமலை புத்திசாலி, அவர் மிகவும் நன்றாக வருவார்" என்று கூறினார். எதிர்வரும் காலத்தில் தமிழக அரசியலில் அண்ணாமலை மிக முக்கியமான ஒரு இலக்கை அடைவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரஜினி எம்பி ஆவாரா?
நடிகர் கமல்ஹாசன் எம்பியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், ரஜினிகாந்த் எம்பி ஆவாரா என்று செய்தியாளர்கல் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "அதெல்லாம் தேவையே இல்லை.. ரஜினிக்கு கவர்னர் பொறுப்பே கூட கொடுத்தார்கள். அதையே அவர் தான் வேண்டாம் என சொல்லிவிட்டார். எம்பி பதவி எல்லாம் அவருக்கு தேவையில்லை" என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசியல் களம்
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஆனால், இந்தாண்டே அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. திமுக இப்போதுள்ள கூட்டணியுடன் அப்படியே தேர்தலை எதிர்கொள்ள திட்டமிடுகிறது. மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணியை இறுதி செய்துவிட்டது. இந்த கூட்டணிக்குள் வேறு கட்சிகளை அழைத்து வர முயற்சிகள் நடக்கிறது.
குறிப்பாக விஜய் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகள் நடக்கிறது. ஆனால், விஜய் தரப்பு பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதையே தொடர்ந்து சொல்லி வருகிறது. எனவே, அடுத்தாண்டு தேர்தலில், திமுக, அதிமுக விஜயின் தவெக, சீமானின் நாம் தமிழர் என மொத்தம் 4 முனை போட்டி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications