மோடி ஹாப்பி அண்ணாச்சி.. கிரீன் சிக்னல் தந்த "அன்வர்".. ராமநாதபுரம் ரூட் கிளியர்.. அப்போ அதுதானா?
ராமநாதபுரம்: அதிமுகவில் மீண்டும் அன்வர் ராஜா இணைந்துள்ள நிலையில் பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட சாதகமான சூழ்நிலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவி வருகிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி, குஜராத்தில் உள்ள வதோதரா தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் பிரதமர் மோடி வெற்றிபெற்றார்.

அதன்பின் வதோதரா தொகுதியில் பிரதமர் மோடி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் தென் இந்தியாவில் கவனம் செலுத்த பாஜக முடிவு செய்துள்ளது. இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளதாக கடந்த சில நாட்களாகவே விவாதம் நடந்து வருகிறது. ஆனால் இது பற்றி உறுதியற்ற தகவல்கள் மட்டுமே வருகின்றன.
இந்த தொகுதியில் மோடி போட்டியிடுவது தொடர்பாக சமீபத்தில் கூட பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆலோசனை செய்துள்ளார். தென் மாநில பாஜக தலைவர்கள், பொதுச்செயலாளர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் ஜே.பி நட்டா இந்த திட்டத்தை தெரிவித்து அது தொடர்பாக நேற்று ஆலோசனை கேட்டு இருக்கிறார். . இதற்கு பெரும்பாலான தலைவர்கள், உடனடியாக ஆதரவு வழங்கி உள்ளனர். மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என்று தீவிரமாக கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் மோடி எங்கே ராமநாதபுரத்தில் போட்டியிடுவாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.
காரணங்கள்: இதற்கு பின் பல்வேறு காரணங்கள் உள்ளன. முக்கியமாக தமிழ்நாட்டில் அதிக எம்பிக்களை வெல்ல பாஜக முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் எப்படியாவது பாஜகவை வளர்க்க வேண்டும் என்று அந்த கட்சி முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் தொகுதியில் மோடி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் இந்த முறை வடக்கில் பாஜகவிற்கு சரிவு ஏற்படும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேபோல் காங்கிரஸ் பெரிய எழுச்சி அடையும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அப்படி இருக்க வடக்கில் இழக்கும் இடங்களை தெற்கில் தட்டி தூக்கும் விதமாக மோடி தென் மாநிலத்தில்.. அதாவது தமிழ்நாட்டில் ராமநாதபுரம் தொகுதியில் மோடி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
வாரணாசி மற்றும் ராமநாதபுரம் இரண்டு தொகுதிகளிலும் மோடி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதி என்றாலும்.. ராமர் பாலம் உள்ள சென்டிமென்ட், சிவ தளம், போன்ற இந்துத்துவா கனெக்சன் முக்கியமான காரணிகளாக பார்க்கப்படுகிறது.
2019 தேர்தலிலேயே தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் மோடியை களமிறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலையில்தான் இந்த முறை அவர் ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்று செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது அதிமுகவில் அன்வர் ராஜா இணைந்துள்ளார்.
அன்வர் ராஜா: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னாள் எம்.பி அன்வர் ராஜா. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து சேரலாம் என்ற அறிவிப்பை அடுத்து அதிமுகவில் இணைந்துள்ளார்.
ராமநாதபுரத்தில் குறிப்பிடத்தகுந்த அளவில் இஸ்லாமியர்கள் ஆதரவு இவருக்கு உள்ளது. முன்னாள் எம்பியான இவருக்கு இப்போதும் குறிப்பிடத்தகுந்த அளவில் இஸ்லாமியர்கள் செல்வாக்கு உள்ளது. இந்த நிலையில்தான் அதிமுகவில் மீண்டும் அன்வர் ராஜா இணைந்துள்ள நிலையில் அவர்களின் கூட்டணியில் உள்ள பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட சாதகமான சூழ்நிலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் லோக்சபா தேர்தலில் பாஜகவிற்காக வாக்கு கேட்பேன். அரசியலில் விமர்சனங்கள் என்பது அனுமதிக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் பாஜக போட்டியிட்டால் நான் வாக்கு சேகரிப்பேன். காங்கிரஸ் கட்சியை தவிர பாஜக உடன் அனைவரும் கூட்டணி வைத்துள்ளனர். விலகி இருந்தாலும் அதிமுகவினர் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். இடையில் சின்ன சறுக்கல்தான் ஏற்பட்டது, என்று அன்வர் ராஜாவே கூறி உள்ளார்.
அப்படி இருக்க அன்வர் ராஜா இங்கே போட்டியிடுவதில் கூட ஆர்வமாக இல்லை, மோடியை ஆதரிக்க ரெடியாக இருக்கிறார் என்று தெரிகிறது. இதனால் இஸ்லாமியர்கள் ஆதரவும் கொஞ்சம் மோடிக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக ராமநாதபுரத்தில் மோடி களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications