சவுதி பாலைவனத்தில் கதறும் இந்தியர்.. வேலைதேடி சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி.. கண்ணீர் வீடியோ
ரியாத்: உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் வேலை தேடி சவுதி அரேபியா சென்றார். அங்கு அவர் பாலைவனத்தில் கொளுத்தும் வெயிலுக்கு நடுவே ஒட்டகம் மேய்க்கும் பணி வழங்கப்பட்டது. இதனால் அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், வெயிலை தாக்குப்பிடிக்க முடியவில்லை என கதறும் வீடியோ வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது. ஆனால் அந்த வீடியோவை அவரது தாயும், மனைவியும் நம்பாமல் உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் பிரதாப்பூர் பிளாக், செய்க்ப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அங்கித் பார்தி என்ற இந்திரஜித். இவருக்கு வயது 25. அவர் தேர்வு செய்த நாடு தான் சவுதி அரேபியா.

இவரது தந்தை பெயர் ஜெயபிரகாஷ். மெக்கானிக்காக இருக்கிறார். தாய் பெயர் ரஞ்சு தேவி. அங்கித் பார்திக்கு ஒரு தம்பி இருக்கிறார். அவரது பெயர் ரஞ்சித். 12ம் வகுப்பு வரை அங்கித் பார்தி படித்தார். கடந்த 2020ம் ஆண்டில் பிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 3 வயதில் மகன் இருக்கிறார்.
அங்கித் பார்தி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் மனைவி பிங்கி மற்றும் மாமனார் ராஜேஷ் சரோஜ் ஆகியோர் அவரை வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும்படி வலியுறுத்தினர். கடந்த 1ம் தேதி அவர் சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றார். மாதம் ரூ.28 ஆயிரம் சம்பளத்தில் வேலை உள்ளதாக கூறி அவரை மனைவி பிங்கி, மாமனார் ராஜேஷ் சரோஜ் ஆகியோர் சவுதிக்கு அனுப்பினர்.
ஆனால் அங்கித் பார்தி சவுதி அரேபியா சென்றவுடன் அவருக்கு வேலை தருவதாக கூறிய முதலாளி அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்களை வாங்கி வைத்து கொண்டார். அதன்பிறகு அவரை தனிமைப்படுத்தி உள்ளதோடு, தினமும் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் பணியை கொடுத்துள்ளார். இதனால் அங்கித் பார்தி கடும் அதிர்ச்சியடைந்தார். ஊரில் குடும்பம் கஷ்டத்தில் உள்ளதால் சில நாட்கள் அவர் அந்த பணியை செய்தார். ஆனால் பாலைவனத்தில் வெயில் மண்டையை பிளந்தது.
இதனால் அவரால் அந்த பணியை செய்ய முடியவில்லை. பணியை மாற்றி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவரது முதலாளி மறுத்துள்ளார்.
இந்நிலையில் தான் அவர் தான் படும் கஷ்டத்தை வீடியோவாக எடுத்து அனுப்பி உள்ளார். அந்த வீடியோவில் அங்கித் பார்தி பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கிறார். தனது பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்களை வாங்கி வைத்து கொண்டு முதலாளி ஒட்டகம் மேய்க்க வைத்துள்ளார். தன்னால் இந்த வேலையை செய்ய முடியவில்லை. அதிகமான துன்புறுத்தலுக்கு உள்ளாகிறேன். இதனால் என்னை இந்தியாவுக்கு அழைத்து செல்ல உதவி செய்யுங்கள் என கதறி அழுகிறார்.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி அனைவரையும் கலங்க வைத்துள்ளது. ஆனால் அங்கித் பார்த்தியின் மனைவி பிங்கி மற்றும் தாய் ரஞ்சு தேவி ஆகியோர் அவர் துன்பப்படுவதை நம்ப மறுக்கின்றனர். இதுபற்றி மனைவி பிங்கி கூறுகையில், ‛‛எனது கணவருடன் தினமும் தொலைபேசியில் பேசி வருகிறேன். ஏதாவது சண்டை அல்லது கஷ்டமான நாளில் அவர் தன்னை இந்தியா அழைத்து செல்லும்படியும் வீடியோ வெளியிட்டு வருகிறார்'' என்றார்.
அதேபோல் அங்கித் பார்தியின் தாய் ரஞ்சு தேவி கூறுகையில், ‛‛தனது மகன் முதல் முறையாக வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு சிரமங்கள் இருக்கும். அதற்கு ஏற்ப அவர் தன்னை மாற்றி கொள்ள வேண்டும்'' என்று கூலாக கூறியுள்ளார். இதற்கிடையே அங்கித் பார்த்தி கதறும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி நெட்டிசன்களை கலங்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications