10 நாளில் 12 பேர்.. சவுதியில் மீண்டும் தலைதூக்கிய தலை துண்டிப்பு மரண தண்டனை.. வெளியான ஷாக் தகவல்
ரியாத்: சவுதி அரேபியாவில் வாளால் தலையை துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றும் சம்பவம் மீண்டும் அதிகரித்துள்ள ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 10 நாளில் மட்டும் 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில் பலருக்கும் தலை துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சில நாடுகளில் குற்றவாளிகளுக்கான தண்டனை என்பது மிகவும் பயங்கரமாக உள்ளது. குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் குற்றம் செய்பவர்களுக்கு பொது வெளியில் தண்டனை வழங்கப்படுவதும் நடைமுறையில் உள்ளது.
குறிப்பாக சவுதி அரேபியாவில் தலை துண்டித்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நடைமுறை இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

சவுதி அரேபியாவுக்கு எதிர்ப்பு
இந்தியா உள்பட பல நாடுகளில் மரண தண்டனையை நிறைவேற்றவே பல நாடுகளில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் தான் சவுதி அரேபியாவில் தலை துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு பல்வேறு தரப்பினர் கடுமையாக எதிர்த்தனர். ஐநா மனித உரிமைகள் அமைப்பும் சவுதி அரேபியாவுக்கு எதிராக கருத்துகளை கூறியது. தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றுவதை கைவிட வேண்டும் என்று கோரிக்கைகள் விடப்பட்டது.

மரண தண்டனை மறுபரிசீலனை
இதனால் சவுதி அரேபியாவில் தலையை துண்டித்து தண்டனை நிறைவேற்றம் செய்வதும், மரண தண்டனை பெற்றவர்களுக்கு ஒரே நேரத்தில் தண்டனையை நிறைவேற்றுவது பற்றியும் மறுபரிசீலனை செய்யப்பட்டது. அதோடு மரண தண்டனை வழங்கும் எண்ணிக்கையையும் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கொலை, கொள்ளை, போதைபொருள் கடத்தல் உள்ளிட்ட சில குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

12 பேருக்கு மரண தண்டனை
இந்நிலையில் தான் தற்போது சவுதி அரேபியாவில் மரண தண்டனையை நிறைவேற்றுவது அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதாவது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களுக்காக கடந்த 10 நாட்களில் 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர், சிரியாவை சேர்ந்த 4 பேர், ஜோர்டானை சேர்ந்த 2 பேர், சவுதி அரேபியாவை சேர்ந்த 3 பேர் அடங்குவர்.

தலை துண்டிப்பு
இந்த 12 பேரில் சிலரது தலையை வாளால் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சவுதி அரேபியாவில் கொலை குற்றவாளிகள், போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள், பயங்கரவாதிகள் என மொத்தம் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தான் தற்போது தலை துண்டித்து மரண தண்டனை நிறைவற்றியது விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது.












Click it and Unblock the Notifications