இந்தியா உட்பட 14 நாடுகளுக்கு ஒர்க் விசா வழங்கப் போவதில்லை! சவுதி திடீர் அறிவிப்பு! என்ன காரணம்?
ரியாத்: சவுதி அரேபியா இந்தியா, வங்கதேசம், எகிப்து, இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு வொர்க் விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்தியா உட்பட எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இஸ்லாமியர்கள் அனைவரும் ஹஜ் புனித யாத்திரைக்குச் செல்ல வேண்டும் என்பதைக் கடமையாகவே வரையறுக்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் ஹஜ் காலகட்டம் தொடங்கியுள்ள நிலையில், மெக்கா, மதீனா ஆகிய இரு இடங்களுக்கும் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் இருந்தும் பல ஆயிரம் பேர் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள்.

விசா நிறுத்தம்
இதற்கிடையே மெக்கா, மதீனா அமைந்துள்ள சவுதி அரேபியா அரசு திடீரென இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கடந்த மே மாதம் முதல் இந்த ரூல்ஸ் அமல்படுத்தப்பட்டது. ஒர்க் விசா தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உரிய ஹஜ் விசா இல்லாதவர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன
சவுதியில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும். ஒவ்வொரு நாட்டிற்கும் குறிப்பிட்ட விசா மட்டுமே ஒதுக்கப்படும். ஆனால், கடந்த காலங்களில் ஒர்க் விசா உள்ளிட்ட இதர விசாக்களை பெற்றுக் கொண்டு பலரும் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இதனால் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு மரணங்களும் ஏற்பட்டன, இதைத் தடுக்கவே இப்போது விசா தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளாக் விசா
உம்ரா, பிஸ்னஸ் மற்றும் குடும்ப விசா வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிளாக் விசாவும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை மொத்தமாக பணியமர்த்த பிளாக் வொர்க் விசாவை பயன்படுத்துகின்றன. பொதுவாகக் கட்டுமானம், ஹோட்டல் மற்றும் வீட்டு வேலைகள் உள்ளிட்ட துறைகளுக்கு இந்த விசாக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சவுதியில் இந்தத் துறைகள் தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்களே அதிகளவில் நம்பியுள்ளன. இப்போது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்த விசாக்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. முன்பே குறிப்பிட்டது போல ஹஜ் சீசனில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எப்போது மீண்டும் வழங்கப்படும்
சவுதி அரசு இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை. மேலும், இந்தத் தடை எப்போது நீக்கப்படும் என்பது பற்றியும் உறுதியான தகவல் எதுவும் இல்லை. இதனால் வேலை தேடும் வெளிநாட்டினர் மட்டுமின்றி, சவுதியில் உள்ள உரிமையாளர்களும் கூட குழப்பத்தில் உள்ளனர். அதேநேரம் இதனால் பொருளாதார பாதிப்புகள் ஏற்படலாம் என்ற கவலையும் எழுந்துள்ளன.
எந்த நாடுகளுக்கு விசா நிறுத்தப்பட்டுள்ளது!
- இந்தியா
- பாகிஸ்தான்
- வங்காள தேசம்
- அல்ஜீரியா
- இந்தோனேசியா
- எகிப்து
- ஏமன்
- ஈராக்
- ஜோர்டான்
- மொராக்கோ
- நைஜீரியா
- எத்தியோப்பியா
- சூடான்
- துனிசியா
காங்கிரஸ் விமர்சனம்
இதற்கிடையே காங்கிரஸ் கட்சி இது மோடி அரசின் தோல்வி என்று சாடியுள்ளது. இந்தியா உட்பட 14 நாடுகளுக்குச் சவுதி அரசு விசாக்களை நிறுத்தி வைத்துள்ளது மோடி அரசின் வெளியுறவுக் கொள்கைகள் தோல்வியைச் சந்தித்து வருவதையே காட்டுவதாகக் காங்கிரஸின் பவன் கேரா சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications