சேலம் மண்டபத்தில் 12 கோடி பணம், 2.5 கிலோ தங்கம்.. 10 ரூபாய்க்கு சாப்பாடு போட்டு 100 கோடி மோசடி
சேலம்: சேலத்தில் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் ₹10க்கு சாப்பாடு போட்டு 100 கோடி மோசடி செய்ய முயன்ற கும்பல் சிக்கியுள்ளது. சேலத்தில் கூட்டம் நடந்த குறிப்பிட்ட திருமண மண்டபத்தில் 12 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விஜயா பானு, ஜெயப்பிரதா மற்றும் பாஸ்கர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எத்தனை சதுரங்க வேட்டை படம் வந்தாலும், ஆசையை தூண்டி மக்களை ஏமாற்ற முடியும் என்பது நிரூபணம் ஆகி வருகிறது. பண ஆசையை தூண்டி புத்தியை தடுமாற வைத்து, அவர்களை நம்ப வைக்க சில மோசடி வேலைகளை செய்து, கோடிகளை மோசடி செய்கின்றன. 100 ரூபாய்போட்டால் 200 கிடைக்கும் என்று இரட்டிப்பு ஆசையை தூண்டி மக்களை ஏமாற்றும் கும்பல் எல்லா ஊர்களிலும் வலம் வருகிறார்கள்.

எம்எல்எம் மோசடி, பழைய நகைக்கு புதிய நகை தரும் மோசடி, மண்ணுளி பாம்பை கொடுத்து மோசடி, கோயில் கோபுரம் கலசம் என்ற பெயரில் மோசடி, நகை சீட்டு மோசடி, ஏலச்சீட்டு மோசடி, கடன் தந்தால் அதிக வட்டி தருவதாக மோசடி, குறைந்த வட்டிக்கு கடன் வாங்கிதருவதாக மோசடி இப்படி பல வழிகளில் மோசடி செய்பவர்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் 100 கோடி முதல்1000 கோடி வரை அசால்ட்டாக மோசடிகளை நடத்திவிட்டு அந்த கும்பல்கள் வேறு பகுதிகளில்புதிதாக கடையை திறக்கிறார்கள். இப்படி மோசடியில் சிக்கிய பணத்தை இழக்கும் பலர், பின்னாளில் பணம் போய்விட்டது என்று கவலையுடன் போலீசை முற்றுகையிடுகிறார்கள். யாராலும் தரமுடியாத கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை தந்தால், நம்பக்கூடாது என்று போலீஸ் எத்தனை முறை சொன்னாலும், ஏமாறுபவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். சேலத்தில் நடந்த மோசடி பற்றி பார்ப்போம்..
சேலத்தில் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் ₹10க்கு வழங்கப்பட்ட உணவு வழங்கப்பட்டிருக்கிறதாம். அங்கு தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அப்போது அங்கு வந்த மக்களிடம் உங்கள் கைகளில் உள்ள பணத்தை எங்களிடம் முதலீடு செய்தால் 7 மாதங்களில் இரட்டிப்பாக திரும்ப கிடைக்கும் என விளம்பரம் செய்துள்ளனர்.
இதை உண்மை என்று நம்பிய பலர், விளம்பரத்தில் வீழ்ந்துள்ளனர். சுமார் ₹50,000 முதல் ₹5 லட்சம் வரை பணத்தை போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்திருக்கிறார்கள். நேற்று, ₹1 லட்சம் முதலீடு செய்தால் இரண்டு நாட்களில் ₹2 லட்சம் கிடைக்கும் என இக்கும்பல் விளம்பரம் செய்திருக்கிறது. இந்த உண்மை என்று நம்பி மக்கள் கூட்டம் அலைமோதியது
இதையடுத்து என்ன இங்கு இவ்வளவு கூட்டம் என்று போலீசார் நேரில் சென்றுள்ளனர். அங்கு வந்து போலீசார் விசாரித்துள்ளனர். அதற்கு அங்கிருந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ஏதோ மோசடி நடக்கிறது என்பதை உணர்ந்த போலீசார், உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சேலம் மாநகர போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து அங்கு சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உள்ளே சென்று விசாரணை நடத்தியதில் எந்த ரசீதும் கொடுக்காமல் ₹100 கோடி வரை வசூலித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அறக்கட்டளையை நடத்தும் விஜயா பானு மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை விஜயா பானு, ஜெயப்பிரதா மற்றும் பாஸ்க ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். அறக்கட்டளை இயங்கிய திருமண மண்டபத்தில் 12 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான விஜயா பானு, ஜெயப்பிரதா மற்றும் பாஸ்கர் ஆகிய 3 பேரும் சேர்ந்து ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. எனினும் விசாரணைக்கு பின்னரே முழுவிவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications