முன்னாள் விஏஓ வீட்டில் புகுந்த முகமூடி கொள்ளை கும்பல்! 60 பவுன் தங்கநகையுடன் எஸ்கேப்! ஆடிப்போன சேலம்
சேலம்: சேலம் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட முகமூடி கும்பலினர், வீட்டில் இருந்த பெண்கள், சிறுவனை கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டு 60 பவுன் தங்க நகை, ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்ற துணிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
வங்கி ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் வீடுகளை குறிவைத்து சில கொள்ளை கும்பலினர் நகை, பணம் திருடிச்செல்லும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. போலீசாரும் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் இந்த சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்
அப்படித்தான் நெஞ்சை பதற வைக்கும் வகையில் சேலத்தில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் புகுந்து குடும்பத்தினரை கத்தி முனையில் மிரட்டி கட்டிப்போட்டு 60 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பகுதியில் மண்மலை காட்டுக்கொட்டாய் என்ற ஊரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவர் வேணுகோபால் (வயது 71). தனலட்சுமி, விஜயகுமாரி என இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் மகன் ராம்குமார். இவர் மயிலாடுதுறையில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். 2-வது மனைவிக்கு ஒரு மகள் உண்டு. அவருக்கு திருமணம் ஆகிவிட்டது.
கை, கால்களை கட்டி போட்டு
இந்த நிலையில், வேணுகோபால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல் மனைவி தனலட்சுமியை அழைத்துக்கொண்டு கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். வீட்டில் இரண்டாவது மனைவி ராஜ்குமாரி, ராம்குமாரின் மனைவி காந்திமதி மற்றும் மகள் வழி பேரன் ஆகிய 3 பேரும் வீட்டில் இருந்துள்ளனர். நேற்று முன் தினம் இரவு சுமார் 7 மணியளவில் காம்பவுண்டு சுவர் ஏறி ஒரு முகமூடி கும்பல் உள்ளே புகுந்துள்ளது. மொத்தம் 6 பேர் உள்ளே புகுந்துள்ளனர். சிறுவன், 2 பெண்கள் என 3 பேர் மட்டுமே இருந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் அவர்களை மிரட்டி நகை, பணத்தை எடுத்து வரும்படி கூறினர். அப்போது அவர்கள் கத்தி கூச்சலிட முயன்றதால் வாயில் துணியை கட்டி, கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு சமையல் அறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை அவிழ்த்தனர். பின்னர் அங்கிருந்த பீரோ சாவியை கேட்டனர். ஆனால் அவர்கள் பீரோ சாவி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.
60 பவுன் நகைகள் கொள்ளை

இதையடுத்து பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை அந்த கொள்ளை கும்பலினர் கொள்ளையடித்தனர். இதற்கிடையே பால்காரர் ஒருவர் வீட்டுக்கு வந்திருக்கிறார். இதை கவனித்த கொள்ளை கும்பல் அவரையும் நைசாக பிடித்து கட்டிப்போட்டுவிட்டனர். இதையடுத்து அந்த கும்பலினர் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் பால்காரரான அந்த நபர் வாயால் கட்டை கடித்து அவிழ்த்தார். தொடர்ந்து அனைவரது கட்டை அவிழ்த்துவிட்டார்.
இது தொடர்பாக ராஜகுமாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வீட்டில் வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையர்கள் 6 பேரையும் பிடிக்க விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் விசாரணையில், ஏற்கனவே வேணுகோபால் வீட்டில் நகை, பணம் கொள்ளை சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
2வது முறையாக விஏஓ வீட்டில் கொள்ளை
அதாவது கடந்த 2013 ஆம் ஆண்டில் மர்ம கும்பல் ஒன்று இவரது வீட்டுக்குள் புகுந்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 3 நாட்களில் கொள்ளை கும்பலை கைது செய்து, நகை, பணத்தை திருப்பி மீட்டு ஒப்படைத்துள்ளனர். எனவே இந்த கும்பலினர் தான் மீண்டும் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியிருப்பார்களோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள். சினிமா பாணியில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications