அடுத்தடுத்து 3 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிய லாரி.. 4 பேர் பலி..சேலத்தில் சோகம்..போதையால் விபத்து?
சேலம்: சேலம் மாவட்டத்தில் மூன்று இருசக்கர வாகனங்கள் மீது லாரி அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பைக்கில் வந்த 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஜலகண்ட புரம் அருகே மூன்று பைக்குகள் மீது லாரி அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர் விபத்தில் பைக்குகளில் வந்த 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
லாரி ஓட்டுநர் மது போதையில் லாரியை ஓட்டியதால் இந்த கோர விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. சேலம் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்த விவரங்கள் வருமாறு:-

இருசக்கர வாகனங்கள் மீது மோதிய லாரி
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே செலவடை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் வழியாக செல்லும் சாலையில் இன்று கோர விபத்து நடைபெற்றது. அதாவது தேங்காய் பாரம் ஏற்றிக்கொண்டு வந்த லாரி தாராமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை காட்டுராஜா (வயது 31) என்பவர் ஓட்டி வந்தார். லாரி செலவடை கூட்டுறவு சொசைட்டி அருகே உள்ள தரைப்பாலத்தில் வந்த போது மூன்று இருசக்கர வாகனங்கள் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

4 பேர் உயிரிழப்பு
அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதிய இந்த பயங்கர விபத்தில் தாரமங்கலம் ராமி ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 26) இவரது அக்கா மகன் சந்தோஷ் (15) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். நிவாஸினி ஒன்றை வயது குழந்தை சேலம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது. அதேபோல மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சாந்தி (40) என்பவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

4 பேர் படுகாயம்
மேலும், வசந்தகுமார் (38) மேட்டூர் சங்ககிரி ஆணை பள்ளம் பகுதியைச் சேர்ந்த இந்துமதி (23) இவரது மகள் இனியா (12) ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மாதையன் (30) மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டியை சேர்ந்த மாதேஷ் (30) ஆகிய இருவரும் சேலத்தில் மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லாரி டிரைவர் கைது
இந்த பயங்கர விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலம் எஸ்.பி , மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். தொடர்ந்து இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி ஓட்டுநர் மது போதையில் இருந்ததால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் காட்டுராஜாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
