அடடா பரவாயில்லையே.. கூட்டணி தலைகளை மொத்தமாக மேடைக்கு ஏற்றிய பாஜக.. இத்தனை பேரா? ஆனா ஒரு சிக்கல்
சேலம்: சேலத்தில் நடக்கும் பாஜக கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் மேடைக்கு ஏற்றப்பட்டு உள்ளனர். பிரதமர் மோடி பங்கேற்றுள்ள கூட்டத்தில் பாஜகவின் கூட்டணி முழுமையாக மேடைக்கு ஏற்றப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த வாரம் வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.

இதையடுத்து பிரதமர் மோடி இன்று சேலத்தில் பாஜக சார்பாக பிரச்சாரம் செய்ய உள்ளார். மதியம் 12.50 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வருகிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி வரும் இந்த நிகழ்வில் கூட்டணி தலைவர்கள் மேடையேற்றப்பட உள்ளனர். ஓ பன்னீர்செல்வம், பாமகவின் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் பங்கேற்று உள்ளனர் . அதேபோல் டிடிவி தினகரனும் இந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளார்.
கூட்டணி தலைவர்கள்; சேலத்தில் நடக்கும் பாஜக கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் மேடைக்கு ஏற்றப்பட்டு உள்ளனர். பிரதமர் மோடி பங்கேற்றுள்ள கூட்டத்தில் பாஜகவின் கூட்டணி முழுமையாக மேடைக்கு ஏற்றப்பட்டு உள்ளது.
பாஜக நடத்தும் முக்கியமான தேர்தல் கூட்டமாக இது பார்க்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு பின் சேலம் வரும் பிரதமர் மோடி என்பதால் பாஜக இதை பிரம்மாண்டமாக நடத்த உள்ளது. பிரதமர் வருவதையொட்டி, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஜி.கே.வாசன், சரத்குமார், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உள்ளனர். இதன் மூலம் மேடையில் பிரம்மாண்ட கூட்டணியை ஏற்றி பாஜக சாதித்து உள்ளது.
பாமக கூட்டணி: பாஜக - பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 10 தொகுதிகளில் பாமக போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தைலாபுரம் தோட்டத்தில் நடந்த சந்திப்புக்கு பின்னர் ராமதாஸ், அண்ணாமலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கட்சியை கலைத்த சரத்குமார்: 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைந்துள்ளார் சரத் குமார். அதிமுகவிலிருந்து கடந்த 2007ஆம் ஆண்டு விலகிய அவர் தனியாகச் சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். சுமார் 17 ஆண்டுகளாகத் தமிழக அரசியலில் இருந்த சமத்துவ மக்கள் கட்சியின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
பாஜக கூட்டணியில் அமமுக-விற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் அணிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் ஒரு சிக்கல்: இதில் பல தலைவர்கள் மேடையில் தோன்றினாலும்.. அவர்களின் வாக்கு சதவிகிதம் என்னவோ குறைவாகவே உள்ளது. பாமகவின் வாக்கு சதவிகிதம் 3, அமமுக வாக்கு சதவிகிதம் 2.5 , ஐஜேகே உள்ளிட்ட மற்ற கட்சிகளின் வாக்கு சதவிகிதம் மொத்தமாகவே 2 சதவிகிதம் மட்டுமே இருக்கும்.
இது போக பாஜகவின் கடந்த லோக்சபா வாக்கு சதவிகிதம் 3.66. ஓ பன்னீர்செல்வத்தின் வாக்கு சதவிகிதம் தனியாக தெரியாத நிலையில் இந்த கூட்டணி பிரம்மாண்டமாக தோன்றினாலும் வாக்கு சதவிகித ரீதியாக இது பெரிய கூட்டணியா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications