மத்திய அரசுக்கு பணம் தருகின்ற ஏடிஎம் ஆக மாநிலங்களை மாற்றிவிட்டார்கள்.. முதல்வர் ஸ்டாலின்
சேலம்: சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "மத்திய அரசுக்கு பணம் தருகின்ற ஏடிஎம் ஆக மாநிலங்களை மாற்றிவிட்டார்கள். புதிய கல்வி கொள்கை, நீட், ஜிஎஸ்டி என மாநிலங்களின் கல்வி, நிதி அதிகாரத்தை முழுவதுமாக பறித்துவிட்டார்கள்" என்று கூறினார்.
சேலத்தில் இன்று திமுக இளைஞரணி 2-வது மாநாடு தொடங்கியது. மிக பிரம்மாண்டமாக நடந்து வரும் இந்த மாநாடானது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில், இன்று காலை கனிமொழி எம்.பி கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:- கடல் போல் திரண்டு இருக்கும் திராவிட பட்டாளமே..

கொள்கை பிடிப்பும் லட்சிய தாரகமும் கொண்ட லட்சக்கணக்கான தம்பிமார்களான உங்களை வீரபாண்டியர் மாவட்டமான சேலத்தில் ஒருசேர பார்க்கும் போது எனக்கு பெரிய உற்சாகமும் மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் பிறக்கிறது. தமிழகத்தின் வளத்திற்கும், நலத்திற்கும் ஆபத்து வந்துள்ளது. நமக்கு இப்போது வந்துள்ள ஆபத்தை தடுக்கவே மாநில உரிமை மாநாடாக இந்த மாநாடு நடக்கிறது. நம்முடைய தமிழ் இனத்திற்கு ஆபத்து வந்திருக்கிறது.
மொழியை அழித்து, தமிழ் பண்பாட்டினை அழித்து, மாநில மதிப்பை அழித்து அதன்மூலம் தமிழகத்தை அழித்து நம்மளை அடையாளமற்றவர்களாக மாற்ற பாசிச பாஜக திட்டமிடுகிறது. இன்னொரு பக்கம் 10 ஆண்டுகாலம் தமிழகத்தை எல்லா வகையிலும் பாடுபடுத்திய கட்சி வருகிறது அதிமுக. மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறார் பழனிசாமி. இப்போது அதிமுக நடத்தும் உள்ளே வெளியே ஆட்டம் பாஜக போட்டு கொடுத்தது.
எடப்பாடியின் பகல் வேஷத்தினை அதிமுகவினரே நம்ப தயாராக இல்லை. இது தான் உண்மை. மாநில சுயாட்சி கோரிக்கை பொறுத்தவரை, இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை. மாநிலங்களுக்கு போதுமான அதிகாரங்களை வழங்கிவிட்டு, நாட்டின் ஒருமை பாட்டையும், ஒற்றுமையையும் பாதுகாக்க என்ன தேவையோ அதை மட்டும் வைத்துக்கொண்டால் போதும்.
மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது கலைஞர் நமக்கு கற்றுக்கொடுத்த முழக்கம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெறும் வெற்றிக்கு பிறகு இந்த முழக்கம் இந்தியாவின் முழக்கமாக மாற போகிறது. அமைய இருக்கிற இந்தியா கூட்டணி ஆட்சியானது மாநில உரிமைகளை வழங்குகிற சிறப்பான அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி தரக்கூடிய முயற்சியில் கவனம் செலுத்தும். திமுக அரசை மட்டும் மனதில் வைத்து இப்படி சொல்லவில்லை.
மாநிலங்களை ஆளக்கூடிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி, திரிணாமூல் காங்கிரஸ் என எந்த கட்சியாக இருந்தாலும்.. ஏன் பாஜக ஆட்சி செய்கிற மாநிலங்களுக்கும் மாநில சுயாட்சி வேண்டும் என்று தான் எல்லா மாநிலங்களுக்குமான மாநில உரிமையை நாங்கள் கேட்கிறோம். இதனை இங்கே மட்டுமல்ல. அண்மையில் ஒன்றிய பிரதமர் திருச்சி வந்திருந்த போது அவர் முன்பே மேடையில் சொன்னவர் தான் ஸ்டாலின்.
இன்றைக்கு பிரதமராக இருக்கூடிய மோடி, முன்பு குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்தவர் தான். ஆனால் இப்போது மாநிலங்களை மொத்தமாக ஒழித்துக்கட்டுவதற்கான முயற்சியை தான் அவர் வந்ததில் இருந்து செய்துகொண்டு இருக்கிறார். மாநில அதிகாரத்திற்கு உட்பட்டவைக்கும் ஒன்றிய பாஜக அரசு சட்டங்கள் இயற்றுது. எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் மாநில அரசுகளிடம் ஆலோசனை செய்வதில்லை.
எதற்கும் மாநில முதல்வர்களிடம் ஆலோசனை கேட்பது கிடையாது. புதிய கல்வி கொள்கை, நீட், ஜிஎஸ்டி என மாநிலங்களின் கல்வி, நிதி அதிகாரத்தை முழுவதுமாக பறித்துவிட்டார்கள். ஒன்றிய அரசுக்கு பணம் தருகின்ற ஏடிஎம் ஆக மாநிலங்களை மாற்றிவிட்டார்கள். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications