பண மோசடி புகார்:அதிமுக மாஜி அமைச்சர் சரோஜா முன் ஜாமீன் மனு மீதான விசாரணை நவ.10-க்கு ஒத்திவைப்பு!
சேலம்: ரூ76.5 லட்சம் பண மோசடிப் புகாரில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா, முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது மீதான விசாரணையை வரும் 10-ந் தேதிக்கு நாமக்கல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் சரோஜா. இவருடைய உதவியாளராக இருந்தவர் சேலம் ராசிபுரத்தை சேர்ந்த குணசீலன்.

பண மோசடி புகார்
குணசீலன் அண்மையில் ராசிபுரம் போலீசில் முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் மீது ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், சத்துணவு பணியாளர், அங்கன்வாடி பணியிடங்கள் உள்ளிட்ட அரசு வேலைகளை வாங்கித் தர பொதுமக்களிடம் பணம் வசூலித்தேன். இந்த பணம் ரூ76.5 லட்சம் முன்னாள் அமைச்சர் சரோஜாவிடம்தான் கொடுக்கப்பட்டது. ஆனால் பணம் கொடுத்தவர்களுக்கு இதுவரை வேலை கிடைக்கவில்லை.

போலீஸ் விசாரணை
இதனால் பணம் கொடுத்தவர்கள் என்னிடம் கேட்டனர். இது தொடர்பாக சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சனிடம் நான் கேட்ட போது, பணத்தை தர முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்தனர். ஆகையால் முன்னாள் அமைச்சர் சரோஜாவிடம் இருந்து பொதுமக்களுக்கு தர வேண்டிய ரூ76.5 லட்சத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார் குணசீலன். இது தொடர்பாக சேலம் மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு ஆய்வாளர் அம்பிகாபதி சில நாட்களாக விசாரணை நடத்தினார்.

மாஜி அமைச்சர் சரோஜா மீது வழக்கு பதிவு
இந்த விசாரணையில் மொத்தம் 15 பேரிடம் ரூ76.5 லட்சம் பணம் பெற்று சரோஜாவும் அவரது கணவரும் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் மோசடிகள் தொடர்பான 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் முன்னாள் அமைச்சர் சரோஜா கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது.

முன் ஜாமீன் கிடைக்குமா?
இந்நிலையில் நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜாவும் அவரது கணவர் லோகரஞ்சனும் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீது நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குணசேகரன் இன்று விசாரணை நடத்தினார். இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணை வரும் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications