கலங்கும் கள்ளக்குறிச்சி.. சேலத்திலோ பைக்கில் சென்று கள்ளச்சாராயம் பால் பாக்கெட் போல் டோர் டெலிவரி
சேலம்: கள்ளக்குறிச்சி கருணாபுரம் விஷச்சாராயம் சம்பவத்தில் 35 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் சூழலில், சேலம் ராமசேசபுரம் பகுதியில் பால்பாக்கெட் போல பைக்கில் சென்று பாக்கெட் கள்ளச்சாராயத்தை சிலர் டோர் டெலிவரி செய்துள்ளார்கள். இதுதொடர்பான அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாரயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சுமார் 100க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாரயம் குடித்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர்..

மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை மோசமாக இருப்பதால், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனிடையே சம்பவம் பற்றி அறிந்ததும் சுகாதாரத்துறையினா் மற்றும் வருவாய்த்துறையினா் கருணாபுரத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனிடைமேய விஷ சாராய இறப்புகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 26 பேர் வாந்தி வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாக தெரிவித்து, கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
போலீஸ் துறை மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் பாக்கெட் சாராயத்தை அருந்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் பிரவீன்குமார் (வயது 26) நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் வயிற்று வலியின் காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் சுரேஷ் (40), சேகர் (59) ஆகியோரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும் அவர்களின் உடல்கள், உடல் கூராய்விற்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இறப்பின் காரணம், உடல் கூறாய்விற்கு பின்பு தெரியவரும். கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இருந்து 4 சிறப்பு டாக்டர்களை கொண்ட குழு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த டாக்டர் குழு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும், சிறப்பு டாக்டர் குழுவினர் கள்ளக்குறிச்சி வந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
18 பேர் ஆம்புலன்ஸ்கள் மூலமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயர்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 6 பேருக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 12 ஆம்புலன்ஸ்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தயாராக வைக்கப்பட்டுள்ளது" என்று அரசு கூறியிருந்தது.
கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் வரை பலியாகி உள்ளதால் தமிழகத்தில் கல்வராயன் மலையும், கள்ளக்குறிச்சியும் இப்போது பெரிய பேசுபொருளாகி உள்ளது. போலீசாரின் உதவி இல்லாமல் இப்படி அப்பட்டமாக சாராயம் விற்க முடியாது என்று கூறும் எதிர்க்கட்சிகள் , காவல்துறையின் அமைச்சரான முதல்வர் ஸ்டாலின்,இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. நடந்த சம்பவத்திற்கு அவரே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், சேலம் ராமசேசபுரம் பகுதியில் பால்பாக்கெட் போல பைக்கில் சென்று பாக்கெட் கள்ளச்சாராயத்தை சிலர் டோர் டெலிவரி செய்துள்ளார்கள். இதுதொடர்பான அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து தகவலகள் இல்லை.. எனினும் கள்ளச்சாரயம் விற்கப்படும் இந்த வீடியோவை பார்த்த மக்கள், கள்ளச்சாராயம், கஞ்சா, சட்டவிரோதமாக பார்களில் நடக்கும் மதுவிற்பனை விவகாரத்தில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் மீதும் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications