போதையில் பஞ்சாயத்து.. காவல் நிலையத்தில் ரத்தம் சொட்டச் சொட்ட.. சேலம் இளைஞர் செய்த சம்பவம்
சேலம்: சேலம் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை மருந்து பழக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தீபாவளி பண்டிகையின்போது கஞ்சா இளைஞர்கள் சிலர் போதையில் கொலை வெறியில் ஒரு வீட்டை அடித்து நொறுக்கிய பதைபதைக்கும் வீடியோ வெளியாகியிருந்தது.
அதேபோல போதையில் ஒரு பிரச்சினை செய்த ஆசாமியை போலீஸ் விசாரணைக்கு காவல்நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் போதை மருந்து பயன்பாடு அதிகரித்து வருகிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கஞ்சா, போதை ஊசி, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதை மருந்துகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். உள்ளூர் தொடங்கி சர்வதேசளவில் போதை நெட்வொர்க் விரிவடைந்துள்ளது.
சேலம் மாவட்டத்திலும் போதை புழக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட பழக்கம் இளைஞர்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காவல்துறை சில முக்கிய நெட்வொர்க்குகளை கைது செய்தும் பிரச்சினை தீரவில்லை. சேலத்தின் மிகப்பெரிய பிரச்சினையாக போதை மருந்து பழக்கம் உருவெடுத்து வருகிறது.
சேலம் ஏற்காடு பெருமாள்பட்டி அருகே கஞ்சா போதை தலைக்கேறிய இளைஞர்கள் சிலர், நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையின்போது ஒரு வீட்டை அடித்து உடைத்து மேற்கூரை வழியாக உள்ளே சென்று விஜய் என்பவரை தாக்கினர். போதையில் தகராறு செய்தவரை தட்டி கேட்டதால் அந்த கும்பல் தாக்குதல் நடத்தினர்.
தடுக்க சென்ற ஊர் மக்களையும் தாக்கி தகாத வார்த்தைகளில் அந்த கும்பல் திட்டியது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அதே சேலத்தில் போதையால் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சேலம் மாநகரம் பள்ளப்பட்டி காவல் நிலைய எல்லையில், புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்திற்கு வெளியே உள்ள டாஸ்மாக் கடையில் இன்று மாலை விருத்தாசலத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் மது போதையில் கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுகுறித்து பள்ளப்பட்டி காவல்நிலையத்துக்கு தகவல் சென்றுள்ளது. அதனடிப்படையில் காவல்துறையினர் நேரில் சென்று விசாரித்துள்ளனர். சக்திவேலை விசாரணை செய்ததில் அவர் போதையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதில் காவல்துறையினரே குழம்பியுள்ளனர்.
அவரை மேற்கொண்டு பள்ளப்பட்டி காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். சக்திவேல் காவல்நிலையத்திலும் முன்னுக்குப் பின் முரணாக பேசிய காவல்துறையினரையே சோர்வடைய செய்துள்ளார். காவல்துறையினர் என்ன செய்வதென்று அறியாமல் போதை தெளியும் வரை காத்திருக்க முடிவு செய்தார்கள்.
சக்திவேல் காவல்துறையினரிடம் பாத்ரூம் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். காவலர்களும் அனுமதி கொடுத்துள்ளனர். இதையடுத்து சக்திவேல் பாத்ரூம் சென்று மறைத்து வைத்திருந்த பிளேடு துண்டை எடுத்து தன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு பதறியடித்து சென்ற காவல்துறையினர், கழுத்தில் ரத்தம் சொட்ட.. சொட்ட காயங்களுடன் இருந்த சக்திவேலை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக்திவேல் யார், அவர் எப்படி போதைக்கு அடிமையானார், எதற்காக இப்படி செய்தார், இதன் பின்னணி என்ன என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications