இபிஎஸ்-ன் சொந்த தொகுதியான எடப்பாடியில்.. எந்த சாதி வாக்காளர்கள் அதிகம்?
சேலம்: தமிழ்நாட்டில் முக்கியமான ஸ்டார் தொகுதிகளில் ஒன்றாக எடப்பாடி தொகுதி இருக்கிறது. இந்த எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் எந்த சாதியினர் அதிகம் இருக்கிறார்கள். இது தேர்தல் கணக்கிற்கு எந்தளவுக்கு முக்கியமானது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடி மீது ஒட்டுமொத்த மாநிலத்தின் பார்வையும் விழுந்துள்ளது. எடப்பாடி ஹாட்ரிக் வெற்றியை வென்றுள்ளார். மேலும், அவர் அதிமுகவின் முகமாகவும் முதல்வர் வேட்பாளராகவும் இந்த முறை களமிறங்குகிறார். எனவே, அவர் வெல்லவே வாய்ப்பு அதிகம்.

வன்னியர்கள் அதிகம்
இருப்பினும், அதையும் தாண்டி திமுக கடும் போட்டி தரும் எனத் தெரிகிறது. இதற்கிடையே எடப்பாடி தொகுதியில் வெற்றியைத் தீர்மானிக்கும் சாதி வாரியான சதவீதக் கணக்குகள் இப்போது வெளியாகியுள்ளன. எடப்பாடி தொகுதியில் எந்தச் சமூகம் எவ்வளவு பலத்துடன் இருக்கிறது என்பதைப் பார்த்தால், அங்கே வன்னியர் சமூகமே கிங் மேக்கராக திகழ்கிறது.. அங்கு ஒட்டுமொத்த வாக்காளர்களில் கிட்டத்தட்ட சுமார் 46%, அதாவது 1,26,065 வாக்காளர்கள் வன்னியர்களாகவே உள்ளனர்.
எந்த சாதியினர் எவ்வளவு?
ஆதிதிராவிடர், சுமார் 10%, அதாவது 27,405 வாக்காளர்கள் உள்ளனர். வெள்ளாளக் கவுண்டர் சுமார் 9%, (24,665 வாக்காளர்கள்), நாடார் சுமார் 8% (21,924 வாக்காளர்கள்), பருவதராஜகுலம், சுமார் 7% (19,184 வாக்காளர்கள்) உள்ளனர். இதர சமூகத்தினர் சுமார் 20%, அதாவது 54,811 வாக்காளர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இபிஎஸ்-ஸின் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' கூட்டணி!
சுமார் 46 சதவீத வாக்குகளைக் கொண்டுள்ள வன்னியர் சமூகத்தின் ஆதரவைப் பெற, பாமக-வுடன் மெகா கூட்டணியை அமைத்துள்ளார் எடப்பாடியார். இது தவிர, பாஜக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய அதிமுக மெகா கூட்டணியை அமைத்துள்ளது. இதனால் மற்ற சமூக வாக்குகளும் எடப்பாடி தொகுதியில் அதிமுகவில் வருகிறது.
அதிமுக பாமக கூட்டணி அமைந்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் வன்னியர் வாக்குகள் 50 சதவீதத்தை நெருங்குவது இபிஎஸ்க்கு மிகப் பெரிய பலம். அத்தோடு, அமமுக- பாஜக கூட்டணியும் சேர்ந்திருப்பதால் தனது சொந்தக் கோட்டையை மீண்டும் ஒருமுறை அவர் எளிதில் தக்கவைத்துக்கொள்வார் என்றே தெரிகிறது.
4 முனை போட்டி
தமிழ்நாட்டில் இப்போது 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக மற்றும் அதிமுக என இரு திராவிட கட்சிகளுமே வலிமையான ஒரு கூட்டணியை அமைத்துள்ளன. இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இது தவிர நாம் தமிழர் கட்சியும் வழக்கம் போலத் தனித்துப் போட்டியிடுகிறது. மேலும், விஜய்யின் தவெகவும் களத்தில் உள்ளது. விஜய் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது
எடப்பாடி தொகுதியைப் பொறுத்தவரை அதிமுக சார்பில் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக சார்பில் காசி போட்டியிடுகிறார். அதேபோல நாம் தமிழர் சார்பில் பிரியதர்ஷினி போட்டியிடுகிறார். தவெக சார்பில் இந்த தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் வேட்புமனுவை உரிய முறையில் நிரப்பாததால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து சுயேச்சையாகப் போட்டியிடும் பிரேம்குமார் என்பவருக்கு விஜய் கட்சி ஆதரவு அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications