எடப்பாடியை கைப்பற்றினார் பழனிசாமி.. திமுகவை பின்னுக்கு தள்ளிய தவெக ஆதரவு சுயேட்சை வேட்பாளர்
சேலம்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடினர். தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டினார்கள். எடப்பாடி தொகுதியில் பழனிசாமி 8 முறை போட்டியிட்டுள்ளார். அங்கு அவர் அதிகளவு வெற்றி பெற்றாலும், சில தோல்விகளும் சந்தித்துள்ளார். எடப்பாடியில் இந்த தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகள் உள்ளன. இதில் எடப்பாடி தொகுதி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அங்கு எட்டவாது முறையாக போட்டியிடுகிறார். தொடர்ந்து 4வது முறையாக போட்டியிடுகிறார். தன்னுடைய பெயரிலேயே அந்த தொகுதி இடம்பெறுமளவுக்கு பிணைப்புடன் இருக்கிறார்.

அருண்குமாரின் வேட்புமனு தள்ளுபடி
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் காசி, நாம் தமிழர் கட்சியில் பிரியதர்சனி போட்டியிடுகிறார். தவெக சார்பில் போட்டியிடுவதற்காக அந்தக் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் அருண்குமாரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் தவெக எடப்பாடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் பிரேம்குமார் என்பவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி தொகுதியில் மொத்தம் 2,74,054 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 92.08 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அங்கு பழனிசாமி 1989, 1991, 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2021 தேர்தலில் திமுக வேட்பாளர் சம்பத்குமாரை 69,352 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பழனிசாமி வெற்றி பெற்றார்.
எடப்பாடி பழனிசாமிக்கு பிளஸ்
கடந்த 2006 1996 தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி அங்கு தோல்வியடைந்தார். கவுண்டர் மற்றும் வன்னியர் சமுதாயத்தினர் அங்கு கணிசமாக உள்ளனர். பழனிசாமி தோல்வியடைந்த 2 தேர்தல்களிலும் அங்கு பாமக தான் வெற்றி பெற்றது. அதனால் பாமகவுடன் கூட்டணி இருப்பதை எடப்பாடி பழனிசாமி சென்டிமென்டாக கடைபிடித்து வருகிறார். இந்தமுறையும் பாமகவுடன் கூட்டணி வைத்திருப்பது அவருக்கு பிளஸ்.
தேர்தலுக்கு முன்னதாகவே தவெக அறிவித்த வேட்பாளர் பின் வாங்கியது போன்றவையும் அவருக்கு சாதகமான அம்சமாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் அங்கு தொடர்ந்து நான்காவது முறையாக எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவாரா அல்லது அவருக்கு திமுக, தவெக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் போட்டி கொடுப்பார்களா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், எடப்பாடி தொகுதியில் எடப்பாடி கே.பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். 95 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். எடப்பாடி பழனிசாமி அதிக வாக்கு வித்தியாசத்துடன் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications