திமுகவுக்கு பயம்.. அதிமுக கூட்டணியை அசைக்க முடியாது! தனித்து தான் ஆட்சி! அடித்துச் சொல்லும் எடப்பாடி
சேலம்: இன்னும் தேர்தலுக்கு காலம் அதிகம் உள்ளது, தேர்தல் நேரத்தில் நிறைய கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி. மேலும், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியில் எந்தெந்த துறையில் முறைகேடுகள் நடந்து உள்ளதோ அதையெல்லாம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் அதிமுக மாநகர் கட்சி அலுவலகத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," அதிமுக தலைமையிலான கூட்டணி ஒற்றுமையாக வலிமையாக 2026 ஆம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும்.
அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று ஒட்டுமொத்த மக்களும் முடிவு செய்துவிட்டார்கள். மக்களுடைய எழுச்சி பார்க்கும்போது திமுக ஆட்சி அகற்றப்படுவதற்கு காரணம் தெரிகிறது. திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை.

சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகம் இருக்கிறது. திமுக ஆட்சி இருக்கக் கூடாது என்று மக்கள் கொந்தளிப்புடன் இருப்பது அதிமுக சுற்றுப்பயணத்தின் போது தெரிகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வேடிக்கையாக உள்ளது. முதல்வர் விளம்பரம் செய்ய வேண்டும், மக்களை கவர்ச்சிகரமாக பேசி இழுக்க வேண்டும், அடுத்தாண்டு நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை அரங்கேற்றுகிறார்கள்.
நான்கரை ஆண்டு காலம் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை செய்யவில்லை. விளம்பரத்தாள்களில் நிறைய செய்ததாக வெளியிட்டுள்ளார்கள். இருப்பினும் திமுக ஆட்சியில் மக்களிடையே குறைகள் அதிகம் உள்ளது. நான்கரை ஆண்டு காலம் மக்களை பற்றி சிந்திக்காமல் அடுத்தாண்டு நடைபெற உள்ள தேர்தலையொட்டி, விளம்பரத்தால் என்னென்னவெல்லாம் செயல்படுத்தினோம். குறைகள் இருந்தால் சொல்லுங்கள் என்று உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் மூலமாக வீடு வீடாக சென்று கொடுத்து செல்போன் எண் குறிக்க சொல்கிறார்கள்.
இந்த எண் திமுக ஐடி விங்கிற்கு செல்லும், அதற்காகத்தான் இந்த வித்தையை செயல்படுத்துகிறார்கள் .மக்களுக்கு நன்மை செய்வதற்காக திட்டம் இல்லை. அதிமுக ஆட்சியில் இருந்தபோது திமுக தலைவர் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று மக்களிடம் உள்ள குறைகளை எழுதி கொடுத்து பெட்டியில் போடுங்கள், ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவதாக கூறியிருந்தார். மக்களுடைய பிரச்சினைகள் தீரும் என்று கூறினார். அவ்வாறு பிரச்சினையை தீர்த்து இருந்தால் எப்படி இவ்வளவு பிரச்சினை இருக்கும். இதெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்காக போடும் நாடகம்.
அரசு அதிகாரிகள் பயன்படுத்தினால் தான் தொலைபேசி எண்ணை கொடுப்பார்கள்; மற்றவர்கள் கேட்டால் மக்கள் கொடுக்க மாட்டார்கள். தந்திரமாக மக்களை ஏமாற்றி மக்களின் செல்போன் எண்ணை வாங்கி, ஐடி விங் இடம் கொடுத்து மக்களுடன் உரையாடுவதற்கு வாய்ப்பாக பயன்படுத்துகிறார்கள். அதிமுகவுடன் கூட்டணிக்கு நிறைய கட்சிகள் வருவார்கள்; இன்னும் தேர்தலுக்கு காலம் அதிகம் உள்ளது. தேர்தல் நேரத்தில் நிறைய கட்சிகள் கூட்டணிக்கு வரும். பலம் பொருந்திய கூட்டணியாக அதிமுக தலைமையில் அமைக்கப்படும்.
மற்ற கட்சிகளிலும் கூட்டணி குறித்து முடிவு செய்யாமல் உள்ளார்கள். தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ளது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது; நிறைய கட்சிகள் கூட்டணியில் சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது; அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி ,வெற்றி கூட்டணி அமையும். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியில் எந்தெந்த துறையில் முறைகேடுகள் நடந்து உள்ளதோ அதையெல்லாம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications