ஆட்டுக்கிடாய்-நாட்டுக்கோழிகள் -தட்டு தட்டாக சீர்வரிசை! திருவிழாக் கோலம் பூண்ட சேலம் எடப்பாடி இல்லம்
சேலம்: அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சேலம் சென்றுள்ள எடப்பாடி பழனிசாமியை கட்சியின் நிர்வாகிகள் சாரை சாரையாக சென்று சந்தித்து வருகிறார்கள்.
கட்சியினர் கூட்டம் ஜே.ஜே.வென அலைமோதுவதால் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லம் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் சேலம் வந்த கட்சிக்காரர்கள் ஆட்டுக்கிடாய், நாட்டுக்கோழிகள், தட்டு தட்டாக சீர்வரிசைப் பொருட்கள் என அசத்தியிருந்தனர்.

அதிமுக பொதுச்செயலாளர்
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நேற்று தனது சொந்த ஊரான சேலம் புறப்பட்டுச் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு வழியெங்கும் பிரம்மாண்ட வரவேற்புகள் கொடுக்கப்பட்டன. தொண்டர்கள், நிர்வாகிகள் கொடுத்த வரவேற்பால் திக்குமுக்காடிய எடப்பாடி பழனிசாமியை சீர் வரிசைப் பொருட்களுடன் வந்து மேலும் மகிழ்ச்சியில் திகைக்க வைத்துள்ளனர் புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவினர்.

சி.விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவினர் சேலம் புறப்பட்டு சென்றதோடு, ஆட்டுக்கிடாய், நாட்டுக்கோழிகள், தட்டு தட்டாக சீர்வரிசைப் பொருட்கள், பழக்கூடைகள் என வண்டி வண்டியாக கொண்டு சென்று இறக்கினர். இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி இல்லம் அமைந்துள்ள சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் போக்குவரத்தே ஸ்தம்பிக்கும் அளவுக்கு நிலைமை போனது.

சீர் வரிசைப் பொருட்கள்
இதையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட கூட்டுறவு இளங்கோவன், கட்சியினரை எடப்பாடி பழனிசாமியை பார்க்க அனுப்பி வைத்தார். 7 வகை பழங்கள் சீர் வரிசைத் தட்டுகளில் இடம்பெற்றிருந்தன. எப்போதுமே எதையுமே வித்தியாசமாக செய்யக்கூடிய சி.விஜயபாஸ்கர் இந்த விவகாரத்திலும் வித்தியாசமாக செயல்பட்டு எடப்பாடி பழனிசாமியை மனதை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் கட்சியினர் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஏன் சேலம்?
புதுக்கோட்டையிலிருந்து கட்சிக்காரர்களை சென்னைக்கு அழைத்துச் செல்வதை விட சேலம் பக்கம் என்பதால் கட்சிக்காரர்களை சேலத்திற்கு அணி திரட்டி அழைத்துச் சென்று எடப்பாடி பழனிசாமியிடம் மாஸ் காட்டியிருக்கிறார் சி.விஜயபாஸ்கர்.












Click it and Unblock the Notifications