மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு.. கை விரித்த கர்நாடகா..காவிரிக்காக காத்திருக்கும் டெல்டா விவசாயிகள்
சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவானது விநாடிக்கு 107 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 10000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69 அடியாக சரிந்துள்ளது. தமிழ்நாட்டில் காவிரி கால் பதிக்குமா? குறுவை சாகுபடி தப்பிக்குமா? என்று விவசாயிகள் கவலையடையத் தொடங்கியுள்ளனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அடியோடு சரிந்து விட்டது. கேரளா, கர்நாடகாவில் மழை பெய்தாலும் தமிழ்நாட்டில் மழை பொய்த்து விட்டது. கர்நாடகா அணைகளில் தண்ணீர் இருப்பு இருந்தாலும் தங்கள் தேவைக்குப் போக மட்டுமே தண்ணீர் திறந்து விட முடியும் என்று கர்நாடகா கூறி வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 69 அடியாக உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டபோது நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அதிகபட்சமாக 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. அணைக்கு வினாடிக்கு 176 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து தற்போது டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தண்ணீர் வரத்தைக் காட்டிலும், நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 69 அடியாக சரிந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு அணை நீர்மட்டம் 69 அடியாக உள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தண்ணீர் வற்றிப்போனதால் பண்ணவாடி பரிசல் துறையை ஒட்டி உள்ள நிலப்பரப்புகளில் கால்நடை தீவனங்கள் மற்றும் புற்கள் அதிகளவில் முளைத்து பார்ப்பதற்கு பசுமையான மேய்ச்சல் நிலமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்த்து வருகின்றனர்.
நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோயிலின் நந்தி சிலை, நீருக்கு வெளியே தெரிய தொடங்கியுள்ளது. குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டாலும் அணையில் தண்ணீர் வரத்து குறைந்து வருவதால் சில வாரங்களுக்கு மட்டுமே விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகா அணைகளில் நீர் இருப்பு இருந்தாலும் தமிழகத்தின் பங்கு தண்ணீரை திறக்க அம்மாநில அரசு மறுக்கிறது.
தமிழகத்தின் பங்கு தண்ணீரை திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடக்கோரி முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனிடையே இரண்டு முறை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய அமைச்சரை சந்தித்து பேசி காவிரி நீருக்காக முறையிட்டுள்ளார். ஆனாலும் கர்நாடகா மாநில அரசு செவி சாய்க்க மறுக்கிறது. குறுவை சாகுபடிக்காக தண்ணீர் கிடைக்குமா? தமிழகத்தில் காவிரி கால் பதிக்குமா என்று விவசாயிகள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications