மேட்டூர் அணை நீர்மட்டம் 72 அடியாக சரிவு.. ஆகஸ்ட் 10 வரை மட்டுமே தண்ணீர் திறப்பு?.. குறுவை தப்புமா?
சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 72 அடியாக சரிந்துள்ளது. இதே நிலை நீடித்தால் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்த காரணத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் இதே நாளில் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. நடப்பாண்டு பருவமழை பொய்த்துப்போனதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிந்துள்ளது. குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு 37 நாட்களில் 30 அடி சரிந்து தற்போது 72 அடியாக மட்டுமே உள்ளது.

கர்நாடகாவில் உற்பத்தியாகும் காவிரி ஆறு சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த அணை தண்ணீரின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டு காலமாகவே பருவமழை தவறாது பெய்த காரணத்தால் அணையில் தண்ணீர் 100 அடிக்கும் குறையாமலேயே இருந்தது. கடந்த ஆண்டு மே இறுதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12ஆந் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். இந்த ஆண்டு 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டபோது நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அதிகபட்சமாக 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. அணைக்கு வினாடிக்கு 176 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து தற்போது டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடகா மற்றும் தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை இன்னும் சரிவர பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட குறைந்த அளவே தண்ணீர் வருவதால் மேட்டூர் அணை நீர் மட்டம் தற்போது 72 அடியாக மட்டுமே உள்ளது. மேட்டூர் அணையின் வலதுகரை மற்றும் 16 கண் பாலம் பகுதிகளில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதே நிலை நீடித்தால் காவிரி டெல்டா பாசனத்துக்கு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. குறுவை சாகுபடிக்கே தண்ணீர் சரியாக கிடைக்குமா என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சம்பா, தாளடி விவசாயம் செழிக்க ஆடிப்பெருக்கு நாளில் காவிரி பொங்கி வர வேண்டும் என்று விவசாயிகளின் வேண்டுதலாகும்.












Click it and Unblock the Notifications