7.30 -க்கு வந்த புகார்! 8.30 -க்கு ஆய்வு நடத்திய அமைச்சர் அன்பில் மகேஷ்! அதுவும் அதிமுக தொகுதியில்!
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே பள்ளிக்கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்தில் கள ஆய்வு நடத்தியிருக்கிறார்.
Recommended Video
அமைச்சர் அன்பில் மகேஷ் இவ்வளவு துரிதமாக தங்கள் ஊருக்கு ஆய்வு செய்ய வருவார் என்பதை எதிர்பார்க்காத புளியங்கடை கிராம மக்கள் திகைத்துப் போனார்கள் என்றே சொல்லலாம்.
ஆய்வு செய்ததோடு மட்டுமல்லாமல் ஏற்காடு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.சித்ராவை அலைபேசி மூலம் அழைத்து, பள்ளிக்கட்டிடம் சீரமைப்புக்கு துறை ரீதியான உதவிகள் செய்ய காத்திருப்பதாக கூறியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

ஏற்காடு தொகுதி
சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதிக்குட்பட்ட புளியங்கடை கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருக்கும் தகவல் இன்று காலை 7.30 மணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷின் கவனத்திற்கு சென்றிருக்கிறது. சேலத்தில் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்ற அவர் சற்றும் யோசிக்காமல் நேராக புளியங்கடை கிராமத்துக்கு புறப்பட்டு சென்று பழுதடைந்த பள்ளிக் கட்டிடத்தை பார்வையிட்டார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அதோடு மட்டுமல்லாமல் ஏற்காடு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சித்ராவை அலைபேசி மூலம் அழைத்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கட்டிடம் சீரமைப்பு தொடர்பாக உறுதி வழங்கினார். மேலும், மாவட்ட ஆட்சியர் மூலம் புதுக்கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகளை உடனே தொடங்குமாறும் துறை ரீதியான உதவிகள் செய்ய காத்திருப்பதாகவும் அதிமுக எம்.எல்.ஏ.விடம் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்தார்.

கிராம மக்கள்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வேகத்தையும் சுறுசுறுப்பையும் கண்ட புளியங்கடை கிராம மக்களும், பெற்றோரும் அவருக்கு நன்றி தெரிவித்தனர். அமைச்சர் ஆய்வு நடத்திய போது அதிமுக எம்.எல்.ஏ.சித்ரா அங்கு வராதது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஆரோக்யமான விமர்சனங்களுக்கும், நியாயமான கோரிக்கைகளுக்கும் எப்போதும் முன்னுரிமை கொடுப்போம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார்.

ஊர் ஊராக
அமைச்சர் அன்பில் மகேஷை பொறுத்தவரை குறைந்தபட்சம் வாரத்திற்கு 4 நாட்களாவது கள ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். தலைமைச் செயலகத்தில் உள்ள ஏசி அறையில் அமர்ந்துகொண்டு அதிகாரிகள் சொல்வதை மட்டுமே கேட்டுச் செயல்படாமல் நேரடியாக ஒவ்வொரு ஊருக்கும் விசிட் அடித்து வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications