“என் கைதுக்கு உதயநிதி ஸ்டாலின்தான் காரணம்”.. திடீரென கத்திய சவுக்கு சங்கர்.. சேலம் அருகே பரபரப்பு!
சேலம்: “என் கைதுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் காரணம், அவரது தூண்டுதலின் பேரில் தான் என் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன” என யூடியூபர் சவுக்கு சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார் சவுக்கு சங்கர்.
பெண் போலீசாரை அவதூறாகப் பேசியது, ஹோட்டல் அறையில் கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் முதலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் வழக்கு விசாரணைக்காக சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

பல்வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் ஜாமீன் கோரியுள்ள நிலையில் அந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது. அவர் மீது தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 10 வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவ்வப்போது வழக்கு விசாரணைக்காக சவுக்கு சங்கர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார். அந்தவகையில் உதகையில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமையன்று ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கருக்கு 1 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து சவுக்கு சங்கரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து, உதகை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். போலீசார் இன்று சவுக்கு சங்கரை நீலகிரியில் இருந்து ஆத்தூர் வழியாக வேன் மூலம் சென்னை புழல் சிறைக்கு அழைத்துக்கொண்டு வந்துகொண்டிருந்தனர்.
இன்று பகல் 12.30 மணியளவில் வேனில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சவுக்கு சங்கர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக தகவலறிந்து செய்தியாளர்கள், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் திரண்டனர். சுமார் 2 மணி நேர சிகிச்சைக்குப் பிறகு அங்கிருந்து வேன் மூலம் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சவுக்கு சங்கர்.
அப்போது சவுக்கு சங்கர் வேனில் இருந்தபடியே, செய்தியாளர்களைப் பார்த்து, “என் கைதுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் காரணம், அவரது தூண்டுதலின் பேரில் தான் என் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்குகள் போட்டு கைது செய்து வருகின்றனர்” என கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications