சேலம் பஸ் ஸ்டாண்டில் மேரி வீட்டில் ஆபிசர்ஸ்.. கிருஷ்ணகிரி, தர்மபுரியில் இப்படியா? 9 பேர் சஸ்பெண்ட்
சேலம்: சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், கர்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் கண்டறிந்து சொல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கெனவே பிரத்யேகமாக புரோக்கர்களும் செயல்பட்டு வருகிறார்கள். தற்போது சேலத்தில் என்ன நடந்தது தெரியுமா?
தர்மபுரி மாவட்டத்தில், கர்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் கண்டறிந்து சொல்வதாகவும், சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகளை அழைத்து சென்று, வீட்டில் வைத்து ஸ்கேன் செய்து, பாலினத்தை கண்டறிந்து கூறுவதாகவும், தர்மபுரி மாவட்ட இணை இயக்குனர் சாந்திக்கு கடந்த மாதம் ரகசிய ஒன்று தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு, உரியவர்களையும் போலீசார் கைது செய்திருந்தனர்.. குறிப்பாக, சேலம் மாவட்டம், ஆத்தூர், பஸ் ஸ்டாண்ட் அருகில், மேரி என்பவர் வீட்டில் வைத்துதான், அனைத்து கர்ப்பிணிகளுக்கும், கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டறியக்கூடிய ஸ்கேன் எடுக்கப்படுவதாக கைதானவர்கள் வாக்குமூலத்தில் அப்போது கூறியிருந்தனர்.
இந்த சம்பவம் அப்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மீண்டும் இதே போன்ற புகார்கள் சேலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகவே வட்டமடித்து வருகிறது.
ஆணா, பெண்ணா - ரூ.15 ஆயிரம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் செய்து குழந்தை ஆணா, பெண்ணா என்பதை திருப்பத்தூர் மாவட்ட பகுதிகளில் உள்ள சில கிளினிக்குகளில் கூறுவதாகவும், அதற்காக பணம் பெறுவதாகவும் அதிகாரிகளுக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில், ரகசிய சோதனை நடத்த முடிவானது.
இதற்காக சில கர்ப்பிணிகளை அழைத்து கொண்டு, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான குழுவினர் திருப்பத்தூர் மாவட்ட சுகாதார அலுவலர் வினோத்குமாருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது டூவீலரில் வந்த நபர், ஆதார் அட்டையுடன் சேலத்திற்கு செல்லுமாறு கூறினார். உடனே அதிகாரிகள் குழுவினரும் கர்ப்பிணிகளை அழைத்து கொண்டு, சேலம் சென்றார்கள்.. அங்கிருந்த புரோக்கர்கள் சேலம் வீராணம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

பசுபதி ஸ்கேன் சென்டர்
அங்கு வீராணம் கோழிப்பண்ணை பஸ் ஸ்டாண்டு அருகில் இருந்த "பசுபதி ஸ்கேன் மையம்" என்ற கிளினிக்கிற்கு அழைத்து சென்றனர்.. அங்குதான் கர்ப்பிணிகளுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து தெரிவிக்கும் பணிகள் நடப்பது உறுதியானது.
ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் முத்தமிழ், தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ் கலைமணி ஆகிய 2 பேரும், இந்த கிளினிக்கை நடத்தி வந்ததும், இவர்கள் கருவிலுள்ள பாலினத்தை அறிய தலா ரூ15 ஆயிரம் வசூலித்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த ஸ்கேன் மெஷினை பறிமுதல் செய்த அதிகாரிகள், மேலும் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், 5 புரோக்கர்கள் மீது போலீசில் புகார் தந்தனர்.
அதிரடி சீல் - சஸ்பெண்ட் நடவடிக்கை
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. விதிமுறையை மீறி செயல்பட்ட ஸ்கேன் சென்டருக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்நிலையில, வீராணம் பகுதியில் பசுபதி ஸ்கேன் மையத்தில் கருவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்த விவகாரத்தில், ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்தமிழ், செவிலியர்கள் உள்பட 9 பேரை சஸ்பெண்ட் செய்து மருத்துவத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், ஸ்கேன் மையத்திற்கு சீல் வைக்கப்பட்டு, இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications