சவுக்கு சங்கர் மீது புதிதாக ஒரு வழக்கு.. பெண் எஸ்ஐ அளித்த புகாரில் சேலம் போலீஸ் நடவடிக்கை
சேலம்: பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் சவுக்கு சங்கர் மீது சேலம் சைபர் க்ரைம் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரபல யூடியூபராக இருப்பவர் சவுக்கு சங்கர். சமீபத்தில் இவர் பெண் காவலர்கள் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இததொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரில் கடந்த 4ம் தேதி கோவை போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்தனர்.

தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவரை கோவை அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். சவுக்கு சங்கரை மே 17 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி தற்போது சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் தற்போது சவுக்கு சங்கர் மீது சேலம் சைபர் க்ரைம் போலீசார் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் கூறிய கருத்து தொடர்பாக பெண் சப் - இன்ஸ்பெக்டர் கீதா அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி சேலம் சைபர் க்ரைம் போலீசில் சவுக்கு சங்கர் மீது மொத்தம் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஐபிசி 294 (பி) (பொது இடத்தில் ஆபாச வார்த்தைகளை பேசுதல்), 353 (அரசு ஊழியரை கடமை செய்ய விடாமல் தடுக்கும் வகையில் தாக்குதல் அல்லது சதி செய்தல்), 509 (கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கம் கொண்டிருத்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக சவுக்கு சங்கர் கடந்த 4ம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது காரில் போலீசார் சோதனை மேற்கொண்டு 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சவுக்கு சங்கர், அவரது டிரைவர், உதவியாளர் என 3 பேர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது கோவை, தேனியை தொடர்ந்து சேலத்திலும் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications