தெரிய வந்த பெரிய உண்மை.. சேலம் விஜயாபானுவின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை.. போலீசார் அதிரடி
சேலம்: சேலம் அம்மாப்பேட்டையில் பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட புகாரில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை நடத்தி வந்த விஜயாபானு கைதானார். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தற்போது சாட்சிகளை கலைப்பதாக குற்றம்சாட்டியுள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், விஜயாபானுவின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
சேலம் அம்மாப்பேட்டையில் பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை நடத்தி வந்த விஜயாபானு, அவரது தோழி ஜெயபிரதா மற்றும் பாஸ்கர் உள்பட 4 பேரை சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடம் இருந்து ரூ.12 கோடியே 68 லட்சம், தங்க நகைகள், ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும், தொடர்ந்து தலைமறைவாக இருந்த செந்தில்குமார், அவரது மனைவி கரோலின் ஜான்சி ராணி ஆகியோரும் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்கள். அறக்கட்டளையில் இருந்த செந்தில்குமார், போலியாக ரசீது அச்சடித்து பொதுமக்களிடம் இருந்து பணம் வசூல் செய்தார் என விஜயாபானு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த விஜயாபானு, பொதுமக்களை சந்தித்து வாங்கிய பணத்தை திரும்ப தந்துவிடுவேன் என கூறி வருவதாக தகவல் வெளியானது. மேலும், அவர் சாட்சிகளை கலைக்க இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தள்ளது. இந்த விவகாரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் சாட்சிகளை கலைப்பதால் விஜயாபானு ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாம்.
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறும் போது, விஜயாபானு மீது வேலூரில் பணம், நகை மோசடி உள்பட 4 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் தான் விஜயாபானு சேலத்தில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள அவர், பொதுமக்களிடம் பணத்தை தருவதாக கூறி சாட்சிகளை கலைப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவரது ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றார்கள்.












Click it and Unblock the Notifications