எடப்பாடி கோட்டையில் “மாஸ்டர் பிளான்"- கே.என். நேருவை முதல்வர் ஸ்டாலின் சேலம் அனுப்பியது இதுக்குதானா?
சேலம்: திமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், சேலத்திற்கு கே.என்.நேருவை அனுப்பியதற்கான காரணத்தை தெரிவித்து இருக்கிறார்.
சேலத்தில் இன்று மாலை திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அதில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை வெற்றி பெற வைப்பது தொடர்பாக தொண்டர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை அவர் வழங்கினார்.
சேலம் திராவிட இயக்கம் உருவான மண். இது என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத ஊராகும். ஓராண்டு காலத்திற்கு கருணாநிதி நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம். கருணாநிதியின் நூற்றாண்டில் நாம் 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளோம். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும்.
சேலத்தில் குறிப்பாக நாம் மாபெரும் வெற்றியை பெற வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் நாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேருவை சேலத்திற்கு அனுப்பி வைத்து இருக்கிறேன். அவரை பொறுத்தவரை திருச்சியில் உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி நூற்றுக்கு நூறு மார்க் எடுத்தவர்.
அதனால் நேருவின் வழிகாட்டுதலில் நம்முடைய மாவட்டக் கழக செயலாளர்கள், இங்கு இருக்கக்கூடிய நிர்வாகிகள், நம்முடைய செயல் வீரர்கள் சேலத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற நீங்கள் எல்லாம் பாடுபடுவீர்கள் என்ற நம்பிக்கை உங்களை பார்த்த உடனே எனக்கு கிடைத்துவிட்டது. அதனால்தான் இருமாப்போடு நிற்பதாக நான் தொடக்கத்திலேயே சொன்னேன்.
நான் கடந்த பொங்கல் விழாவில் சொன்னேன். நாடும் நமதே.. நாற்பதும் நமதே என்று. அந்த லட்சிய முழக்கத்தை சேலத்தில் உறக்க சொல்வதற்காகவே நான் வந்திருக்கிறேன். 10 ஆண்டு காலமாக தமிழ்நாட்டை பாழ்படுத்திக் கொண்டு இருந்த அதிமுக ஆட்சியை அகற்றிவிட்டு, மக்கள் நம்மிடம் அளித்த ஆட்சி ஒருபக்கம் நடந்துகொண்டு இருக்கிறது.
ஆட்சி ஒருபக்கம் நடந்துகொண்டு இருந்தாலும், கடந்த 2 ஆண்டுகளாக நமது கட்சியுடைய செயல்பாடுகள் இன்னொரு பக்கம் தீவிரமாக நடந்துகொண்டு இருக்கிறது. எப்போதும் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் கட்சிப் பணிகள் மந்தமாகிவிடும். அப்படி மந்தமாகிவிடக் கூடாது என்பதற்காகவே மிகத் தீவிரமாக கட்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எதிர்க்கட்சியாக இருந்த காலத்தைவிடவும், நீங்கள் ஒவ்வொருவரும் அதிகம் உழைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். குறிப்பாக மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூர், கிளை செயலாளர்கள் ஒவ்வொருவரும் உழைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். அந்த உழைப்பின் காரணமாகவே 2 கோடி உறுப்பினர்களை இணைத்து இருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய 68 ஆயிரம் வாக்குச் சாவடிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து உள்ளோம்.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 100 வாக்காளர்களுக்கு ஒருவர் வீதம் பூத் கமிட்டி உறுப்பினர் அமைக்கும் பணியும் நிறைவடைந்து உள்ளது. உறுப்பினர்களுடைய பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் பட்டியலை சேர்த்ததுடன் பணி நிறைவடைந்துவிடவில்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தொலைபேசி அழைப்பு போயிருக்கிறது.
தனித்தனியாக அழைத்து விசாரிக்க சொல்லி இருக்கிறேன். ஏதேனும் மாற்றங்கள் தேவையென்றால் மீண்டும் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்களிடம் இருந்து வருகிறது. அதனை திருத்தி தருகிறீர்கள். இது சாதாரண பணி அல்ல. பூத் அளவிலேயே இவ்வளவு வலுவான கட்சி இந்தியா அளவில் அல்ல, உலக அளவிலேயே இருக்க முடியாது." என்றார்.












Click it and Unblock the Notifications