ஏற்காடு போறீங்களா மக்களே.. இதை படிச்சிட்டு போங்க.. ஸ்பாட்டுக்கு நேரடியாக போயிட்டாரு கலெக்டர்.. ஹேப்பி
சேலம்: 15 நாட்களுக்கு பிறகு, ஏற்காடு மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது.. இதற்கான அறிவிப்பு ஒன்றும் வெளியாகி உள்ளது. இது சுற்றுலா பயணிகள், மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்... இதற்கு காரணம், இந்த பகுதியின் ரம்மியமான அழகுதான்.

ஏற்காடு ஒரு மலைவாழ் நகரமாகும். இது ஆரஞ்சு மரங்கள், காபி மற்றும் மசாலாப் பொருட்கள், ஷெவராய் மலைகளில் அமைந்துள்ளன. குறிஞ்சி மலர்கள் இங்குள்ள இன்னொரு சிறப்பு.
அமைதியான சூழல்: சுத்தமான மற்றும் கறைபடாத இயற்கை அழகு காரணமாக, வெளியூர், மலையேற்றம் மற்றும் சாகசத்தை விரும்புபவர்கள் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஏற்காடு மிக முக்கியமான இடமாகும்.. நாடு முழுவதிலுமிருந்து மக்கள் ஏற்காடு சுற்றுலா தலங்களுக்கு அதன் அமைதியான மற்றும் அமைதியான சூழலை அனுபவிக்க வருகிறார்கள்.
இப்போது கோடை காலம் துவங்கியாகிவிட்டது.. பள்ளிகளும் லீவு விட்டாச்சு.. இதனால், ஏற்காட்டிற்கு கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.. இனிவரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று தெரிகிறது.. இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கனமழை காரணமாக மலைப்பாதையில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது... ஆங்காங்கே ராட்சத பாறைகளும் சாலையில் சரிந்து விழுந்தன.
ஏற்காடு மலைப்பாதை: அதிலும், ஏற்காடு மலைப்பாதையில் 2-வது கொண்டை ஊசி வளைவில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது... இந்த சாலையில் கனரக வாகனங்கள் எதுவும் செல்ல தடை விதிக்கப்பட்டது.. இதற்கு பிறகு, சீரமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு சாலை மறுபடியும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. கிட்டத்தட்ட 2 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மணல் மூட்டைகள் சரிந்து விழும் நிலைக்கு ஆளானது.
கோடை விடுமுறை : எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். மேலும் கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால், இந்த மலைப்பாதையை சீரமைக்க, சேலம் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படியே, ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3 வது கொண்டை ஊசி வளைவிற்கிடையே சாலை சீரமைப்பு பணிகள் 10 நாட்களுக்கு முன்பு ஆரம்பமாகின.. இந்த பணி நடந்ததால், வெறும் டூ வீலர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது..
மற்ற அனைத்து வகையான வாகனங்களும், அயோத்தி யாப்பட்டணம்-அரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குப்பனூர் சாலை வழியாக சென்றன. 15 நாட்களுக்கும் மேலாக இந்த மலைப்பாதை சீரமைக்கப்பட்டு வந்தன.. இதற்காக மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரிலேயே சென்று பல்வேறு ஆய்வுகளை நடத்தி, பணிகளை விரைந்து முடிக்குமாறும் துரிதப்படுத்தி வந்தார்.
மக்கள் மகிழ்ச்சி: இப்போது சாலை பணிகள் ஓரளவு முடிந்துவிட்டது.. இன்று காலை முதலே பைக்குகள், மற்றும் கார், இலகு ரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது... ஆனால், கனரக வாகனங்கள் மட்டும் குப்பனூர் பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. முன்பு போல சேலம்-ஏற்காடு மலை பாதையில் வாகனங்கள் செல்ல தொடங்கி உள்ளதால், சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்...!!












Click it and Unblock the Notifications