3 மணி நேரமாக கொளுத்தும் வெயிலில் நின்ற தொண்டர்கள்.. நாற்காலி கூட போடாத தவெக! சேலத்தில் நடந்தது என்ன?
சேலம்: தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் என்ற நபர் உயிரிழந்திருக்கிறார். சேலத்தில் நடந்த கூட்டத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான வெயிலில் பலரும் காத்திருந்த நிலையில், அவர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் கூட போடப்படவில்லை. இதனால் பலரும் மயக்கம் அடைந்த சூழலில், ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிர்வாகிகள் சந்திப்புக்கு 4,998 பேருக்கு மட்டுமே பாஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய், தனது பிரச்சார வாகனத்தில் நின்றபடியே உரையாற்றினார்.

தவெக தொண்டர்கள்
தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு 12 மணி முதல் 3 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி விஜய் 12.25 மணியளவில் திடலுக்கு வந்துவிட்டார். இதன்பின் அடுத்த சில நிமிடங்களிலேயே விஜய் பேசத் தொடங்கினார். விஜய்யின் பேச்சிற்கு அக்கட்சியினர் உற்சாகம் அடைந்து கோஷம் எழுப்பினர். இருப்பினும் சீலநாயக்கன்பட்டி பகுதியில் அதிகளவில் வெயில் இருந்தது.
3 மணி நேரமாக காத்திருப்பு
அதேபோல் விஜய் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க காலை 10 முதலே நிர்வாகிகள் வரத் தொடங்கினர். கிட்டத்தட்ட விஜய்யை பார்ப்பதற்காக சுமார் 3 மணி நேரமாக தொண்டர்கள் காத்திருந்தனர். ஆனால் தொண்டர்கள் ஒதுங்குவதற்கு எங்கேயும் நிழற்குடையோ அல்லது மேற்கூரையோ அமைக்கப்படவில்லை. இவ்வளவு ஏன், தொண்டர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் கூட போடப்படவில்லை.
மயக்கம் போட்ட தொண்டர்கள்
இதனால் 3 மணி நேரத்திற்கும் மேலாக தவெக தொண்டர்கள் வெயிலில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தவெக சார்பாக தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டிருந்தாலும், அது போதுமானதாக இல்லை. இதனிடையே தவெக தலைவர் விஜய் பேசிக் கொண்டிருந்த போதே பலரும் மயக்கம் போட தொடங்கினர். இதனால் உடனடியாக மருத்துவக் குழு மூலமாக ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீண்டும் அசம்பாவிதம்
இந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 37 வயதாகும் சூரஜ் என்பவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளி பட்டறையில் பணியாற்றி வந்திருக்கிறார். ஏற்கனவே கரூர் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். தற்போது சேலம் பொதுக்கூட்டத்திலும் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இதனால் தவெகவினர் சோகம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications