சூடான இட்லி, முறுமுறு முடக்கத்தான் தோசை.. திமுக இளைஞரணி மாநாட்டில் 5000 பேருக்கு விஐபி டிபன்
சேலம்: திமுக இளைஞரணி மாநாடு இன்று சேலத்தில் நடைபெறும் நிலையில், இன்று காலை அங்கே 5000 பேருக்குப் பரிமாறப்பட்ட விஐபி டிபன் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
இன்று சேலத்தில் திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. சேலத்தில் உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் இந்த மாநாடு மிகவும் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.

இந்த மாநாடு முதலில் டிசம்பர் மாதமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் இந்த மாநாடு இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டது. இந்த சூழலில் தான் இந்த மாநாடு இன்று நடைபெறுகிறது.
மாநில மாநாடு: இந்த மாநாட்டிற்காக அங்கே பிரம்மாண்ட மேடை போடப்பட்டுள்ளது. மேலும், பந்தல்கள், சேர்கள் எனப் பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு நடக்கும் இந்த மாநாட்டு இன்று காலை தொடங்கியது. இதில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு தலைவர்கள் நேற்றைய தினமே சேலத்திற்குச் சென்றடைந்துவிட்டனர். நேற்று மாலை டிரோன் நிகழ்ச்சி ஒத்திகையும் கூட நடந்தது.
இன்று காலை திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி இந்த மாநாட்டைக் கொடி ஏற்றித் தொடங்கி வைத்தார். இந்த மாநில மாநாட்டிற்குத் தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளில் இருந்தும் திமுகவினர் குவிந்துள்ளனர். இந்த மாநில மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு நேற்று முதலே தயார் செய்யப்பட்டது. விடிய விடிய அதற்கான பணிகள் நடைபெற்றது.
காலை டிபன்: இதற்கிடையே இதில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் 5000 பேருக்கு இன்று காலை தனியாக விஐபி டிபன் பரிமாறப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் சிகப்பு அரிசி இட்லி, முடக்கத்தான் தோசை, பூரி, பொங்கல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அத்துடன் தக்காளி சட்னி, சாம்பார், கார சட்னி பூரி மசாலா ஆகியைவுயம் அந்த விஐபி டிபனில் இடம்பெற்றுள்ளது. மேலும், ஸ்னாக்ஸாக வடை உள்ள நிலையில், இனிப்பிற்காகக் கருப்பட்டி அல்வா பரிமாறப்பட்டு உள்ளது.
இது தவிர இன்று மதியம் மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவும் பரிமாறப்பட இருக்கிறது. மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மட்டன் பிரியாணி, சிக்கன் 65, பிரட் அல்வா ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவை இந்த பணிகள் ஆரம்பித்த நிலையில், இன்று காலை அனைத்து சமையல் பணிகளும் முடிந்ததாகக் கூறப்படுகிறது.
மாநாட்டிற்கான உணவுகளை கே.என். நேரு கவனித்து வரும் நிலையில், உணவு தயாரிக்கும் பணியில் உள்ளவர்கள் திருச்சியில் இருந்தே அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications