சேலத்தில் 23 வயது மகனுக்கு பெண் தேடாமல்.. தனக்கு வரன் தேடிய 70 வயதான தந்தைக்கு ட்விஸ்ட்
சேலம்: சேலம் சூரமங்கலம் பகுதியில் இரண்டாவது திருமணத்திற்கு 70 வயதான தந்தை வரன் தேடி வந்திருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 23 வயதாகும் மகன் தமிழன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), முதலில் தனக்கு திருமணம் செய்து வைக்க சொன்னாராம். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், தனது தந்தை செல்வத்தை தமிழன் என்ன செய்தார் தெரியுமா? ஒருவர் மருத்துவமனையிலும், இன்னொருவர் ஜெயிலிலும் இருக்கிறார்கள்.
சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரைச் சேர்ந்த 70 வயதாகும் செல்வம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழக வனத்துறையில் வனவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சண்முகவள்ளி. இவர்களுக்கு தமிழன் (23), உள்பட 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வத்தின் மனைவியை உயிரை மாய்த்துக் கொண்டார்-

பி.காம் சி.ஏ. முடித்துள்ள தமிழன் கொண்டலாம்பட்டி பகுதியில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடை வைத்துள்ளார். அவரது தம்பி சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று காலை வீட்டில் செல்வத்துக்கும், தமிழனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த தமிழன் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தந்தையின் தலையில் அடித்துவிட்டாராம். மேலும் அவர் கத்தியை எடுத்து தந்தையின் கழுத்தை அறுத்தார். இதில் படுகாயம் அடைந்த செல்வம் கீழே சரிந்து விழுந்தார். மேலும் அவருடைய சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்திருக்கிறார்கள்.
பின்னர் உயிருக்கு போராடிய செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். தந்தையுடன் தமிழனும் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு செல்வத்திற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். பின்னர் தந்தையை தாக்கிய தமிழனை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தமிழன் வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடை வைத்திருக்கிறார். இந்த நிலையில் அவர் தனது தந்தையிடம் மேலும் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்தாராம். இதனால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே செல்வம் 70 வயதில் 2-வது திருமணத்துக்கு விளம்பரம் செய்ததாகவும், அதனால் தமிழன் தனது தந்தை மீது கோபத்தில் இருந்தாராம். தனக்கு திருமணம் செய்து வைக்காமல் இந்த வயதில் பெண் தேடுவதா என்ற கோபத்தில் தான் தந்தையை தமிழன் தாக்கினாராம். இதையடுத்து தமிழனை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications