தர்மபுரி இல்லை சேலம்.. உள்ளூர் தனியார் சேனலில் வந்த காட்சி.. விசாரித்த தாசில்தாருக்கு ட்விஸ்ட்
சேலம்: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதியம் தனியார் உள்ளூர் சேனல் ஒன்றில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. அப்போது திடீரென அதில் அந்த படம் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பிட்ட சேனலை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் ஆடிப்போனார்கள். இதுபற்றி தகவலின் பேரில், அரசு கேபிள் டி.வி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2002 முதல் 2020வரை உச்சத்தில் இருந்த கேபிள் சேனல்கள் இப்போது கடந்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக வீழ்ந்து வருகின்றன. உள்ளூர் கேபிளில் புதுப்படம் பார்க்க ஆர்வம் காட்டி வந்த மக்கள், இப்போது கையில் உள்ள ஸ்மார்ட் போன்கள் மூலமும், வீட்டில் உள்ள ஸ்மார்ட் டிவி மூலமும் படம் பார்க்க விரும்புகிறார்கள். இன்றைக்கு ஸ்மார்ட் டிவி இல்லாத வீடுகள் மிக குறைவு என்கிற அளவிற்கு நிலைமை வந்துவிட்டது.

எல்லோரது வீடுகளிலும் பிராட்பேண்ட் கனெக்சன் வாங்க ஆரம்பிக்கும் போது, செயற்கைகோள் தொலைக்காட்சிகளே இல்லாமல் போகும் அளவிற்கு நிலைமை வரலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் யூடியூப், ஓடிடியில் எதை வேண்டுமானாலும் பார்க்க முடியும் என்கிற அளவிற்கு தொழில் நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. இதனை எதிரொலிக்கும் முன்பு போல் உள்ளூர் கேபிள் சேனல்களுக்கு வரவேற்பு இல்லை..
பல ஊர்களில் கேபிள் சேனல்கள் வருமானம் இன்றி மூடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஊரிலும் ஒரு சில சேனல்களே பெயரளவில் இயங்கி வருகின்றன. அப்படி தர்மபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் உள்ளூர் கேபிள் சேனலில் நேற்று முன்தினம் மதியம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. அப்போது திடீரென அதில் ஆபாச படம் ஓடியிருக்கிறதாம். இதனால் அந்த உள்ளூர் சேனலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதை தொடர்ந்து அந்த உள்ளூர் சேனலில் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து அரசு கேபிள் டி.வி. அதிகாரிகள் விசாரணை நடத்திய போது அந்த உள்ளூர் தனியார் சேனல் சேலம் மாவட்டத்தில் இருந்து ஒளிபரப்பாவது தெரிய வந்தது.
இதுதொடர்பாக தர்மபுரி அரசு கேபிள் டி.வி. தாசில்தார் ராஜராஜன் கூறும் போது, உள்ளூர் தனியார் சேனலில் ஆபாச படம் ஓடியதாக கிடைத்த தகவல் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுகுறித்து தர்மபுரி மற்றும் சேலம் மாவட்ட போலீசாரிடம் புகார் அளிக்கப்படும். உரிய விசாரணை அடிப்படையில் நடந்தது என்ன? என்பதை உறுதி செய்து இதில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications