செந்தில் பாலாஜியை பயந்து பதறிப்போய் மு.க ஸ்டாலின் பார்ப்பது ஏன் தெரியுமா? எடப்பாடி சொன்ன காரணம்
சேலம்: உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோவில் சேர்க்கப்பட்ட திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகனை ஒரு சிலர்தான் போய் பார்த்தார்கள்.. ஆனால், பல கட்சிக்கு போயிவிட்டு வந்த ஒருவரை (செந்தில் பாலாஜி) ஸ்டாலின் உள்பட அனைத்து அமைச்சர்களும் ஓடோடிப்போய் பார்ப்பது ஏன்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- திமுக ஆட்சியில் விலை வாசி உயர்ந்து விட்டது. இன்றைக்கு ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் விரோத ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. அதைப்பற்றி எல்லாம் மு.க ஸ்டாலினுக்கு கவலை இல்லை. வீட்டு மக்களை பற்றி மட்டும் தான் இன்றைய முதல்வருக்கு கவலை இருக்கிறது.

அதிமுக ஆட்சியில் விலை வாசி உயராமல் பார்த்துக் கொண்டோம். காய்கறி விலை ஏறினால் அண்டை மாநிலங்களுக்கு சென்று எங்கு குறைவாக உள்ளதோ அங்கே போய் காய்கறிகளை வாங்கி கூட்டுறவுத்துறை மூலமாக காய்கறிகளை விற்பனை செய்தோம். இந்த ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் அதிமுக அரசு பார்த்துக் கொண்டது. ஆனால், இன்று அனைத்து விலையும் உயர்ந்து விட்டது.
மளிகை சாமானில் இருந்து உணவுப்பொருள், காலணி என அனைத்தும் உயர்ந்து விட்டது. 40 சதவீதம் அளவுக்கு விலை வாசி உயர்ந்து விட்டது. வேலை வாய்ப்பு குறைந்து விட்டது. இதையெல்லாம் எடுத்து சொன்னால் இன்றைய முதல்வர் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. இருக்கிற ஆட்சியை பயன்படுத்தி எவ்வளவு சுருட்ட முடியுமோ அவ்வளவு சுருட்டலாம் என்று முடிவு செய்து விட்டார்.
30 ஆயிரம் கோடியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என தெரியாமல் சபரீசனும், உதயநிதியும் தடுமாறிக் கொண்டு இருப்பதாக நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனே கூறினார். நாங்கள் யாரும் சொல்லவில்லை. அந்த 30 ஆயிரம் கோடிதான் ஸ்டாலின் குடும்பத்திற்கு பிரதானமாக தெரிகிறது. மற்ற எதைப்பற்றியும் கவலை இல்லை. விலைவாசி உயர்வை பற்றி கவலை இல்லை. சட்டம் ஒழுங்கை பற்றி கவலை இல்லை.
எதைப்பற்றியுமே கவலைப்படாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். 30 ஆயிரம் கோடி அதிகமாக கொடுத்தது செந்தில் பாலாஜி... அதனால்தான் இன்று மாட்டிக்கொண்டு விழிக்கிறார்... செந்தில் பாலாஜியை காப்பாற்ற ஸ்டாலின் துடித்துக் கொண்டு இருக்கிறார். மூத்த அமைச்சராகவும் திமுகவின் பொதுச்செயலாளராகவும் இருக்கும் துரைமுருகன் உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார்.
இதனை மந்திரி பார்க்கவில்லை. சபரீசன் போய் பார்க்கவில்லை. திமுகவிற்காக உழைத்தவர். பல போராட்டங்களுக்காக சிறை சென்றவர். அப்படிப்பட்டவரை ஒரு சிலர்தான் போய் பார்த்தார்களே தவிர எல்லா அமைச்சர்களும் போய் பார்க்கவில்லை. ஆனால், பல கட்சிக்கு போய்விட்டு வந்த ஒருவரை (செந்தில் பாலாஜி) அதிகமாக பணம் கொடுத்ததால் ஸ்டாலின் ஓடோடிப்போய் பார்க்கிறார். கட்சிக்காக உழைத்தவரை பற்றி கவலை இல்லை.
கட்சிக்காக பாடுபட்டவரை பற்றி கவலை இல்லை. ஆனால், செந்தில் பாலாஜியை அனைத்து அமைச்சர்களும் பார்ப்பதற்கு ஒரே காரணம் தான் உள்ளது. அது ஊழல் மட்டுமே... ஊழல் செய்து அதிக நிதியை கொடுத்தவர் செந்தில் பாலாஜி. எனவே அவர் வாய் திறந்து எதாவது சொல்லிவிட்டால் ஸ்டாலின் இருக்கும் இடமே வேறு இடமாக போயிவிடும். அதனால், பயந்து பதறிப்போய் செந்தில் பாலாஜியை ஸ்டாலின் பார்க்கிறார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொள்கிறார். துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரை போய் பார்த்து என்ன சிகிச்சை கொடுக்கப்படுகிறது என ஒரு பேட்டியாவது சுகாதாரத்துறை அமைச்சர் கொடுத்தாரா? ஊழல் மலிந்த அரசாங்கமாக திமுக உள்ளது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு அரசாங்கம் திமுக அரசாங்கம்தான். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.












Click it and Unblock the Notifications