மாணவர் தலைவர் கொலை! சிங்கப்பூரில் தீட்டப்பட்ட திட்டம்! நட்பு நாடு மீதே வங்கதேசம் பகீர் குற்றச்சாட்டு
சிங்கப்பூர்: வங்கதேசத்தில் இப்போது ஏற்பட்டிருக்கும் அமைதியின்மைக்கு காரணம் மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி படுகொலைதான். இந்த படுகொலைக்கு சிங்கப்பூரில் வைத்துதான் திட்டம் தீட்டப்பட்டது என்று வங்கதேசம் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது.
ஹாடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது, மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்குதான் அனுப்பி வைக்கப்பட்டார். அவரது உயிரை காப்பாற்ற சிங்கப்பூர் மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றனர். இப்படி நம்பிக்கைக்குரிய நட்பு நாடு மீது, வங்கதேசம் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது சர்வதேச அளவில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

குற்றப்பத்திரிக்கை
ஷெரீப் உஸ்மான் ஹாடி படுகொலை அரசியல் பகைமையின் விளைவு என்றும், சிங்கப்பூரில் படுகொலைக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் வங்கதேச காவல்துறை தெரிவித்துள்ளது. இக்கொலை தொடர்பாக, டாக்கா காவல்துறையின் துப்பறியும் பிரிவு, டாக்கா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சதி திட்டத்திற்கு காரணம்
தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், இந்தக் கொலை அரசியல் உள்நோக்கம் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைக்காக 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் மிர்பூர் கவுன்சிலர் தைசுல் இஸ்லாம் சவுத்ரி என்கிற பப்பி, இந்தக் கொலைக்கு உத்தரவிட்டதாகக் குற்றப்பத்திரிக்கை குறிப்பிடுகிறது. வங்கதேசத்தில் தடை செய்யப்பட்ட அவாமி லீக் தலைவர்களுக்கு எதிராக, ஹாடி வெளியிட்ட அறிக்கைகளே இந்தச் சதித் திட்டத்துக்கு காரணம் என காவல்துறை கூறுகிறது.
ஹாடி படுகொலை
32 வயதான ஹாடி, கடந்த 2024ம் ஆண்டு வங்கதேசத்தில், ஹசீனா அரசாங்கத்திற்கு எதிராக நடந்த கிளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். அடுத்த மாதம் நடைபெற இருந்த வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராகவும் களமிறங்க இருந்தார். இப்படி இருக்கையில்தான் டிச.12 அன்று, பால்டன் சாலையில் ரிக்ஷாவில் பயணித்தபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள், ஹாடியை சரமாரியாக சுட்டனர்.
அரசியல் கொலை
தலையில் குண்டு பாய்ந்த நிலையில், பலத்த காயங்களுடன் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட ஹாடி, டிச. 18 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் வங்கதேசம் முழுவதும் பெரும் போராட்டங்களைத் தூண்டியது.
இந்தியா மீது குற்றச்சாட்டா?
ஹாடி கொலையின் சதித்திட்டம், சிங்கப்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கொலை ஒரு 'அரசியல் கொலை' என காவல்துறை தெரிவித்ததோடு, இக்குற்றத்திற்கு இந்தியா துணை நின்றது என்ற குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளது. குற்றப்பத்திரிக்கையின்படி, முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பைசல் என்கிற கரீம் மசூத், முன்னாள் மாணவர் அணித் தலைவர் ஆவார். மற்றொரு குற்றவாளியான ஆலம் கீர், மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட பிலிப் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications