சிங்கப்பூர், ஆஸ்திரேலியா நாடுகளில் இன்று பொதுத் தேர்தல்.. வலுக்கும் போட்டி
சிங்கப்பூர்: சிங்கப்பூர் மற்றும், ஆஸ்திரேலியா நாட்டுக்கான நாடாளுமன்ற பொதுத் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. சிங்கப்பூரில் ஆளும் மக்கள் செயல் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும், பீட்டர் டட்டன் தலைமையிலான லிபரல் நேஷனல் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் நாட்டின் 15 ஆவது நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் மே 3 ஆம் தேதியான இன்று நடைபெறவுள்ளது. இதில், 97 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாகவும், 12 உறுப்பினர்கள் நியமன அடிப்படையிலும் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த தேர்தலில் சுமார் 30 லட்சம் மக்கள் வாக்களிக்கவுள்ளனர். இந்த தேர்தல் 97 இடங்களுக்கு நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும், சிங்கப்பூர் பிரதமராக லாரன்ஸ் வோங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இதற்காக அதிபர் லாரன்ஸ் வோங் தலைமையில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் 1959 ஆம் ஆண்டு முதல் சுதந்திரம் பெற்றதில் இருந்து நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் மக்கள் செயல் கட்சியே ஆட்சி அமைத்து வருகிறது. இந்தப் பொதுத் தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ஆளும் கட்சிக்கு 63 சதவீதம் பேரும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 15 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேபோல, ஆஸ்திரேலியா நாடாளுமன்றத் தேர்தலும் இன்று நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த தேர்தலில் அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும், பீட்டர் டட்டன் தலைமையிலான லிபரல் நேஷனல் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், தொழிலாளர் கட்சி மற்றும் லிபரல் நேஷனல்ஸ் பெரும்பான்மை பெறாவிட்டால், சுயேட்சை எம்பிக்களும் ஆளும் கூட்டணியை தீர்மானிப்பவர்களாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் ஆட்சி அமைக்க 150 இடங்களில் 76 இடங்களைப் பிடிக்க வேண்டும்.
இந்த தேர்தல் ஆஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி கூட்டணிக்கு பொதுமக்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications